நெருங்கும் மழைக்காலம்… அதிகரிக்கும் கொரோனா: WHO எச்சரிக்கை!

Published On:

| By christopher

covid 19 increased in india : WHO Warned

உலகின் பல நாடுகளில் நெருங்கி வரும் குளிர்காலத்திற்கு முன்னதாகவே கொரோனாவின் தாக்குதல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு உலகளவில் கொரோனாவின் தாக்கம் பெருமளவில் குறைந்து விட்டாலும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லை என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்  கொரோனாவுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,49,97,537 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், தொற்றில் இருந்து நேற்று 68 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்று 448 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கடந்த 6ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”உலகின் பல நாடுகளில் நெருங்கி வரும் குளிர்காலத்திற்கு முன்னதாகவே கொரோனாவின் தாக்குதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு காரணமாக இறப்புகள் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பாவில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கைகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா பரவல் அதிக அளவில் பரவ தொடங்கி இருக்கும் நிலையில் உலக நாடுகள் அது குறித்த துல்லியமான தகவல்களை தர வேண்டும்” என்று டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உருமாறும் கொரோனா தொற்று!

இதற்கிடையே கொரோனா தொற்று புதிது புதிதாக அவதாரம் எடுத்து மக்களை தாக்கி வருகிறது என்பதை தமிழக பொது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உருமாறி வரும் வைரசை கண்டுபிடிப்பதற்காக மரபணு பரிசோதனை நிலையம் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.4 கோடி செலவில் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது. இதனால் புது புது வைரஸ்கள் அவ்வப்போது அடையாளம் காணப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இது கொரோனா தொற்றைப் போல் வீரியமிக்கது அல்ல. எனினும் இதனால் தாக்கப்படுபவர்களை உடல்வலி, காய்ச்சல் என்று ஓரிரு நாட்கள் புரட்டி எடுத்து விடுகிறது. தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை உலக அளவில் பிரபலமான ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தி.மு.க. ஆட்சியில் 28,102 புதிய தொழில்முனைவோர்: அமைச்சர் அன்பரசன்

”இந்த தடவை மிஸ்ஸே ஆகாது”: பாபர் அசாம் நம்பிக்கை! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share