ADVERTISEMENT

யானைகள் இறப்பு – யாருக்கும் கவலையில்லை: நீதிமன்றம் கண்டனம்!

Published On:

| By Balaji

ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை, தீவிரமாக எடுத்துக் கொள்ளப்போவதாக ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை உயர் நீதிமன்றம், இதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுவதால், தேசிய வன விலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன், சிபிஐ இணைந்து யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக் கோரி, கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

ADVERTISEMENT

அதில் தேனி மாவட்டம் மேகமலையில் கடந்த 2018ஆம் ஆண்டு 7 யானைகள் பலியானது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால் அதன் பிறகும் யானைகள் பலியாவது குறையவில்லை. நாளிதழ்களில் வந்த புள்ளிவிவரங்களின்படி, 2018 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 84 யானைகளும், 2019ஆம் ஆண்டு 108 யானைகளும், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 61 யானைகளும் பலியாகியுள்ளன. யானைகள் தந்தத்துக்காகவும், பிற வன விலங்குகள் மற்ற தேவைகளுக்காகவும் கொடூரமாக வேட்டையாடப்பட்டு விலை மதிப்பற்ற பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய வன விலங்கு குற்றத்தடுப்பு பிரிவுடன், சிபிஐ அதிகாரிகளும் இணைந்து இந்த வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்குகள் நேற்று(டிசம்பர் 10) நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கடந்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்தியாவில் அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில்தான் யானைகள் அதிகளவில் உள்ளன. ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டில் ரயில்களில் அடிபட்டு யானைகள் பலியாகும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரம் யானைகள்தான் இருந்தது. தற்போது அவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன” என்று கவலை தெரிவித்தனர்.

அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அர்விந்த் பாண்டியன், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 61 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன் என்று ஒன்றிய தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT

இதையடுத்து பேசிய நீதிபதிகள், “யானைகள் இறப்பு தொடர்பாக குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் மட்டுமே பெறப்படுகிறது. அந்த பரிந்துரைகளும் அரசு அலுவலகங்களில் காகித அளவில் மட்டுமே உள்ளது. இந்த நாட்டின் சொத்துகளான யானைகள் இறப்பு குறித்து யாருமே கவலைப்படுவதில்லை. ரயில்கள் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ரயிலின் ஓட்டுநர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.

ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யானைகள் கடந்து செல்லும் ரயில் வழித்தடங்களில் 45 கி.மீ. வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பாதைகளில் 5 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கினாலும், யானைகள் மீது ரயில் மோதினால், அவை பலியாகத்தான் செய்யும். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “அப்படியென்றால், இரவில்தான் வனவிலங்குகள் அதிக அளவில் சாலைகளை, ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றன. எனவே, இதுபோன்ற பகுதிகளில் இரவு வாகன சேவையை நிறுத்தினால் என்ன? அல்லது அப்பகுதிகளில் மேம்பாலங்கள் அமைத்து வாகனங்களை இயக்கினால் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாகும் விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்படும். மேலும், ரயில்வே சொத்துகளை பாதுகாக்க தடுப்புசுவர்களை ரயில்வே நிர்வாகம் எழுப்புவதால், யானைகள் வேறு வழியில்லாமல் தண்டவாளங்களை கடக்கும் சூழல் ஏற்படுகிறது. யானை இழப்பைத் தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share