EVM-VVPAT வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! – அசோக் வர்தன் ஷெட்டி

Published On:

| By vivekanandhan

உச்சநீதிமன்றம் EVM மற்றும் விவிபேட் குறித்து அளித்த தீர்ப்பு ஏமாற்றத்தினை அளிப்பதாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த கணிதம் சம்மந்தமான ஒரு விவகாரத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம், இந்த தீர்ப்பில் என்ன சிக்கல் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

1897 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் பேரவை உறுப்பினர்கள் ஒரு மசோதாவை நிறைவேற்றினர். 246வது மசோதா என்று குறிப்பிடப்பட்ட அந்த மசோதா எதைப் பற்றியது என்றால், பை (π) – ன் உண்மையான மதிப்பை 3.20 என்று சட்டப்பூர்வமாக வரையறுப்பது தொடர்பானது.

இந்த விசித்திரமான மசோதா எட்வர்ட் குட்வின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் வட்டத்தை சதுரமாக்குதல் (Squaring the circle) எனும் பழைய வடிவியல் சிக்கலை தீர்வு கண்டுள்ளதாகச் சொன்னார். அதாவது ஒரு வட்டத்தின் பரப்பளவிற்குள் அதற்கு இணையான பரப்பளவு கொண்ட சதுரத்தை உருவாக்குதல். அதற்காக ‘பை’யின் மதிப்பை 3.20 ஆக மாற்ற வேண்டும் என்று முன்வைத்தார். ஆனால் கணிதவியலாளர் சி.ஏ.வால்டோவின் முயற்சியின் காரணமாக இந்த மசோதா இண்டியானா மாகாணத்தின் செனட் சபையால் நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக இண்டியானா மாகாணம் ஒரு பெரிய சங்கடத்தில் இருந்து தப்பித்தது.

இந்த கதையை சொல்வது ஏனென்றால், கணிதவியல், அறிவியல் மற்றும் புள்ளியியல் போன்ற துறைகளில் எது சரியானது அல்லது எது உண்மை என்பதனை அதிகாரிகளின் மூலமாகவோ, பாராளுமன்றத்தின் மூலமாகவோ அல்லது நீதித்துறையின் மூலமாகவோ உறுதி செய்ய முடியாது.

தண்ணீரை மேல் நோக்கி ஓடுவதற்கு எப்படி பாராளுமன்றம் சட்டமியற்ற முடியாதோ, அதேபோல் நாடு முழுதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 5 EVM மெஷின்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றின் விவிபேட் ஸ்லிப்களை மட்டும் சரிபார்த்தால் போதும் என்ற சேம்பிள் சைஸை உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது. நீதிமன்றம் முடிவு செய்த இந்த சேம்பிள் சைஸ் என்பது புள்ளியில் மாதிரிக் கோட்பாட்டின் அடிப்படை தத்துவங்களோடு ஒத்துப்போகவில்லை.

வாக்காளர்கள் வாக்களிக்கும்போது விவிபேட் ஸ்லிப்கள் மூலம் அவர்களின் வாக்கு சரியாக பதிவாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால் அந்த வாக்குகள் பதிவானபடி எண்ணப்பட்டதா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. EVM இல் நடக்கும் தவறுகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதில் ஆபத்து இருக்கவே செய்யும்.

வாக்குகள் பதிவானபடியே எண்ணப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய, புள்ளிவிவர அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த சேம்பிள் சைஸை முடிவு செய்ய வேண்டும். அதனடிப்படையில் மொத்தமுள்ள EVM மெசின்களில் ரேண்டமாக மெசின்களைத் தேர்ந்தெடுத்து, அந்த மெசின்களில் உள்ள வாக்குகளின் எண்ணிக்கையை, விவிபேட் ஸ்லிப்களை எண்ணுவதன் மூலம் ஒப்பிட வேண்டும்.

விவிபேட் எண்ணிக்கை அடிப்படையில் EVM மெசின்களை ஆடிட் செய்யும் நடைமுறை என்பது lot acceptance sampling போன்றது. இது தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் மேற்கொள்ளப்படும் புள்ளிவிவர தரக் கட்டுப்பாடு தொழில்நுட்பத்திற்கு இணையானதாகும். இந்த சேம்பிள்களில் கண்டறியப்படும் குறைபாடுகளின் எண்ணிக்கையானது, நிர்ணயிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கையை விட குறைவானதாகவோ, அல்லது அதற்கு நிகராகவோ இருந்தால், அந்த சேம்பிள் சைஸை உள்ளடக்கிய மொத்த மக்கள் தொகையினர் வாக்களித்த EVMகளும் சரியானதென உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் ஒருவேளை குறைபாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இந்த சேம்பிள் முழுவதும் நிராகரிக்கப்பட வேண்டும்.

EVM இல் உள்ள வாக்குகளின் எண்ணிக்கைக்கும், விவிபேட் ஸ்லிப்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வேறுபாடு இருந்தால் அந்த இயந்திரத்தை குறைபாடுள்ள இயந்திரம் என்று வரையறுக்கலாம். இது EVM செயலிழப்பு காரணமாகவோ, அல்லது தவறாகப் பயன்படுத்தட்டதன் விளைவாகவோ ஏற்பட்டிருக்கலாம்.

உச்சநீதிமன்றம், அவர்கள் நிர்ணயித்த சேம்பிள் சைஸ் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதையோ, அதில் ஒரு EVM குறைபாடுள்ளது என்று கண்டறியப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதையோ குறிப்பிடவில்லை. தேர்தல் ஆணையமும் இதனை தெளிவுபடுத்தாமல் அப்படியே கடக்கிறது. இந்த இரண்டுமே முக்கியமானது. ஏனென்றால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயந்திரங்கள் குறைபாடுள்ளவை என்று அந்த சேம்பிளில் கண்டறியப்பட்டால், எத்தனை மக்கள் தொகைக்கு அந்த சேம்பிள் தேர்வு செய்யப்பட்டதோ, அந்த மொத்த EVMகளின் வாக்கு எண்ணிக்கைகளும் நிராகரிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், அந்த குறிப்பிட்ட மக்கள் தொகையினர் வாக்களித்த எல்லா EVM மெசின்களின் எல்லா விவிபேட் ஸ்லிப்களும் எண்ணப்பட வேண்டும். அந்த முடிவுகளை விவிபேட் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்க வேண்டும்.

புள்ளியியல் மாதிரிக் கோட்பாடு (Statistical sampling theory) என்ன சொல்கிறதென்றால், நாம் ஒரு சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்படும் EVM களை கணக்கில் கொண்டால், நீதிமன்றம் அறிவித்த சேம்பிள் சைஸ் என்பது, குறைபாடுள்ள EVM களை கண்டறிவதில் 95% தோல்வியடையும். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்படும் EVM களை கணக்கில் கொண்டால் குறைபாடுள்ள EVM களை கண்டறிவதில் 70% தோல்வியடையும். விவிபேட் கொண்டு வந்ததற்கு என்ன காரணமோ அதனை இது வீழ்த்துக்கிறது.

தேர்தல் ஆணையம் சொல்வதன் பின்னால் உள்ள காரணங்கள்

இத்தனை ஆண்டுகளில் EVM எண்ணிக்கைக்கும், விவிபேட் எண்ணிக்கைக்கும் இடையில் ஒரு முறை கூட வேறுபாடு இருந்ததில்லை என்று  தேர்தல் ஆணையம் சொல்கிறது.

இது உண்மை அல்ல என்பதை ஒரு பக்கம் வைத்துக் கொள்வோம். மிகக் குறைவான வேறுபாடுகள் எழுவதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று EVM கள் நல்ல நிலையில் இருக்கின்றன என்பது, இரண்டாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சேம்பிள் சைஸ் தவறாக இருப்பதன் காரணத்தால், மூன்றாவது மேற்சொன்ன இரண்டு காரணங்களும் சேர்ந்து இருக்கலாம்.

ஆனால் சரியான விடை என்பது மூன்றாவது சொன்னது தான். மிகவும் தவறான ஒரு சேம்பிள் சைஸை வைத்துக் கொண்டு, வெளிப்படைத்தன்மை இல்லாத ஒரு ஆடிட் நடைமுறையை வைத்துக் கொண்டு ’எல்லாம் நன்மைக்கே’ என்று நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் பிரகடனப்படுத்த முடியாது.

Association for Democratic Reforms Vs Election Commission of India வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. ஏனென்றால் சேம்பிள் சைஸ்  எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பதை பொதுவெளியில் வைக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. மேலும் வேறுபாடுகள் கண்டறியப்பட்டால் அடுத்து என்ன என்பதையும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக நிபுணர்களின் கருத்தைப் பெற்று நீதிமன்றமும் இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தவில்லை. இன்னும் ஏமாற்றமளிக்கும் விசயம் என்னவென்றால் ADR அமைப்பும் இந்த தெளிவுகளைப் பெறுவதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக பேப்பர் ஓட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது விவிபேட் ஸ்லிப்களை 100% எண்ண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்ததில் நீதிமன்றம் செய்தது சரியே.

தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் மற்றவர்களும் பெரிய சதவீத அளவில் சேம்பிள்களை எடுத்தால் முடிவுகள் துல்லியமாக வரும் என்று தவறான நம்பிக்கையின் அடிப்படையில் தன்னிச்சையான, புள்ளியல் அடிப்படையில் இல்லாத சதவீத சேம்பிள்களை சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் கமல்நாத் 10% சேம்பிள்களை சரிபார்க்க வேண்டும் என்று கேட்டு அது ஏற்கப்படவில்லை. அதன்பிறகு சந்திரபாபு நாயுடு 50% சேம்பிள்களை சரிபார்க்க வேண்டும் என்று கேட்டு அதுவும் ஏற்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்ததும் சரியானதே. ஆனால் அதேபோல் நீதிமன்றம் பரிந்துரைத்த நாடு முழுதும் ஒரே மாதிரியான சேம்பிள் சைஸ் என்பதும் தவறானதே.

என்ன செய்ய வேண்டும்?

EVM மெசின் எப்படி செயலிழக்கும் என்பதோ அல்லது அதனை எந்த வழிகளில் தவறாகப் பயன்படுத்த முடியும் என்பதோ நமக்குத் தெரியாது. நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், புள்ளியியல் அடிப்படையில் 99% அல்லது 99.9% அளவிற்கு துல்லியமாக வேறுபாடுகளை கண்டறியும் வகையில் ஒரு விவிபேட் சரிபார்ப்பு நடைமுறையை உருவாக்க வேண்டும். EVM மற்றும் விவிபேட் எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் நடைமுறையை வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போதே துவங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடியும் நேரத்தில் செய்யக் கூடாது. ஒப்பீடுகள் சரியாக இருக்கும் இடங்களில் தேர்தல் முடிவை EVM எண்ணிக்கை அடிப்படையில் அறிவிக்க வேண்டும். எதாவது வேறுபாடு கண்டறியப்பட்டால் மட்டும், அந்த சேம்பிள் சைஸுக்கு உட்பட்ட எல்லா EVM மெசின்களின் விவிபேட் ஸ்லிப்களையும் எண்ணி முடித்து, விவிபேட் கணக்குகளின் அடிப்படையிலேயே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும். இந்த புள்ளியியல் அடிப்படையிலான சேம்ப்ளிங் நடைமுறையே சரியான முடிவைக் கொடுக்கும்.

இந்த கட்டுரை தி ஹிந்து ஆங்கில நாளிதழில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அமேதி, ரேபரேலியில் யார் வேட்பாளர்கள்? – 24 மணி நேரத்தில் அறிவிப்பு : காங்கிரஸ்

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு: மோடிக்கு சித்தராமையா கடிதம்!

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் : துரைமுருகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share