சொத்துப் பிரச்சினையால் தனது பரம்பரை வீட்டை இழக்கும் நிலை வந்ததும், அவ்வளவு பெரிய வீட்டின் முன்னால் இருக்கும் தூணைக் கட்டிப் பிடித்தபடியே உயிர் விடுவார் சிவாஜி.
படையப்பா படத்தில் இடம்பெறும் இந்த காட்சியில் சிவாஜியின் நடிப்பைக் கண்டு நாமெல்லாம் அசந்துபோனோம்! Court Sivaji Annai illam judgment
கிட்டத்தட்ட அதேபோன்ற சொத்துப் பிரச்சினையில் சிவாஜி தன் சொந்த உழைப்பில் வாங்கிய சென்னை தி.நகரில் இருக்கும் அன்னை இல்லம் ஜப்தி செய்யப்பட்டு ஏலமிடவேண்டுமென்று கோர்ட் தீர்ப்பைக் கேட்டு கலங்கி நிற்கிறார்கள் சிவாஜி ரசிகர்கள்.
அன்னை இல்லத்தின் ஒரு பகுதியை ஜப்தி செய்து அதன் மூலம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ( ராம் குமாரின் மகன்) தனபாக்கியம் எண்டர்பிரைசுக்கு கடனை அடைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி குத்தூஸ் நேற்று (மார்ச் 3) தீர்ப்பளித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் (இப்போது செவாலியர் சிவாஜி கணேசன் சாலை) உள்ளது சிவாஜியின் அன்னை இல்லம். சுமார் 53,240 சதுர அடியில் அதாவது 22 கிரவுண்டில் பரந்து விரிந்திருக்கிறது அன்னை இல்லம். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான வீட்டில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். அதாவது, 53,240 சதுர அடியில் நான்கில் ஒரு பங்கான 13 ஆயிரத்து 310 சதுர அடியை மட்டுமே ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு மற்றும் தீர்ப்பின் விவரம் என்ன?
ஜெகஜால கில்லாடி என்ற படத்தை சிவாஜியின் பேரன் துஷ்யந்த் ஈஷன் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரித்து வந்தார். நன்றாக கவனிக்கவும், சிவாஜி புரொடக்ஷன்ஸ் அல்ல.
இந்த படத் தயாரிப்பில் ஏற்பட்ட பணப் பிரச்சினைகளால் மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3. 74 கோடி ரூபாய் கடன் பெற்றனர். 2017 டிசம்பர் 22 ஆம் தேதி போட்டுக்கொண்ட, இந்த கடன் பத்திரத்தில் துஷ்யந்தின் தந்தையான ராம்குமாரும் கையெழுத்திட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால், சிவாஜியின் பேரன் வாங்கிய கடனை முழுதும் திருப்பி செலுத்தவில்லை. இரண்டரை கோடி வரை செலுத்திவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் வட்டியும் கடனுமாக சேர்த்து மீதம் கணிசமாக இருந்ததால், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்கியது.

பணம் கொடுக்கல் வாங்கல் என்பதால்… சென்னை உயர் நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரனை மத்தியஸ்தராக நியமித்தது. மத்தியஸ்தர் இரு தரப்பிடமும் தொடர்ந்து பேசி கடைசியாக 2024 மே 4 ஆம் தேதி ஒரு அறிவுறுத்தலைப் பிறப்பித்தார்.
அதாவது, அசல் 3.74 கோடி ரூபாய், அதற்குண்டான வட்டி சேர்த்து மொத்தம் 9 கோடியே 2 லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. எனவே எதற்காக கடன் வாங்கப்பட்டதோ, அந்த படமான ஜெகஜ்ஜால கில்லாடி படத்தை தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனமே விற்று பணத்தை அந்நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்தியஸ்தரான நீதிபதி ரவீந்திரன் அறிவுறுத்தினார்.
ஆனால் அப்போதும் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் பிடிகொடுக்கவில்லை. ஜெகஜ்ஜால கில்லாடி படம் இன்னும் விற்பனை செய்யும் நிலைக்கு வரவில்லை. எனவே இப்போது அதன் உரிமையைதர முடியாது என்று மறுத்துவிட்டார். Court Sivaji Annai illam judgment
இதனால் கடுப்பான தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம், ‘மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு’ சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள்.
விவகாரம் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்ற பின்னரும் கூட… ராம்குமார், அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் எவ்வித ரியாக்ஷனும் காட்டவில்லை. தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம், ‘உயர்நீதிமன்றம் பேசித் தீர்த்துக் கொள்ள பல வாய்ப்புகள் கொடுத்தும் துஷ்யந்த் அதை மதிக்கவில்லை’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அந்த நிறுவனத்துக்கு பதில் அபிடவிட் கூட துஷ்யந்த் தரப்பால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் தனது தீர்ப்பில்,

“நீதிமன்றம் இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள பல வாய்ப்புகளைக் கொடுத்தும் சிவாஜி குடும்பம் அதை பயன்படுத்த தவறிவிட்டது. அதனால் சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான தி.நகரில் இருக்கும் பங்களாவின் ஒரு பகுதியை ஜப்தி செய்ய உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மனுதாரரே தி.நகர் சார் பதிவாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது நீதிபதி மொத்தமுள்ள 53 ஆயிரத்து 240 சதுர அடிகொண்ட அன்னை இல்லம் பங்களாவில், நான்கில் ஒரு பகுதி அதாவது 13, 310 சதுர அடியை மட்டுமே ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அன்னை இல்லம் வீட்டில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்று சிவாஜியின் மகள்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர் ஆக அந்த பங்களா சிவாஜியின் மகன்களான பிரபு, ராம்குமார், மகள்களான சாந்தி, ராஜ்வி ஆகிய நான்கு பேர்களுக்கு சொந்தமானது என்ற அடிப்படையிலும்… கடன் ஒப்பந்தத்தில் ராம்குமார் கையெழுத்திட்டிருந்ததாலும்… அவரது பங்கை மட்டும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இது சிவாஜி குடும்பத்துக்குள்ளும் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு மனுதாரரான தனபாக்கியம் என்டர்பிரைசஸ் மூலம் தி.நகர் சார் பதிவாளருக்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அன்னை இல்லம் பங்களாவின் வில்லங்கச் சான்றிதழில், நீதிமன்ற உத்தரவுப்படி நான்கில் ஒரு பங்கு பறிமுதல் செய்யப்படுவதாக பதிவு செய்திருக்கிறார் சார் பதிவாளர். Court Sivaji Annai illam judgment
அன்னை இல்லத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 88 கோடி ரூபாய் ஆகும். ராம்குமாரின் பங்கான நான்கில் ஒரு பங்கு சொத்தின் மதிப்பே 22 கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்கள். ஆனால் துஷ்யந்த் கொடுக்க வேண்டிய மொத்தக் கடன் 10 கோடிக்கு உள்ளேதான் இருக்கிறது. எனவே கடனை வசூலிக்கும் செயல்பாடுகளில் வேகமாக இருக்கிறது தனபாக்கியம் என்டர்பிரைசஸ்.
இன்னொரு பக்கம் சிவாஜி வீட்டின் நான்கில் ஒரு பகுதியை தனியாக ஏலம் போட முடியுமா? அதற்குள் மொத்த பணத்தையும் சிவாஜி பேரன் அந்த நிறுவனத்திடம் செட்டில் செய்வாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. Court Sivaji Annai illam judgment
