திமுக எம்பி ஆ.ராசா மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 21) ரத்து செய்துள்ளது. Court quashed the case of DMK MP A Raja
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போலீசாரின் தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆ.ராசா மற்றும் அமைச்சர் சிவசங்கர் மீது அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அரியலூர் மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ ராசா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றதாகவும் எந்த ஒரு அசம்பாவித நிகழ்வுகளும் போராட்டத்தின் போது நடைபெறவில்லை என்றும் அரியலூர் மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் உள்ள தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆ.ராசா சார்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, “இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட வழக்கு என்றும் இதை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த வாதத்தை தொடர்ந்து நீதிபதி இளந்திரையன், திமுக எம்.பி ஆ.ராசா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக அமைச்சர் சிவசங்கர் மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.Court quashed the case of DMK MP A Raja