தெரு நாய்களை கட்டுபடுத்தும் விவகாரத்தில் அனைத்து துறையினருக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வலியுறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய காலங்களில் தெரு நாய்களின் தொல்லை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தெரு நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிலர் ரேபிஸ் நோயால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
இந்நிலையில் மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கடந்த 2020ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனால் சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தெருநாய்களால் பாதிக்கப்படுகின்றனர். வெறி நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழக்கும் பரிதாபமும் அடிக்கடி நிகழ்கிறது. மாடுகளாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற பொது சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஆகஸ்ட் 11) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் அருள் முருகன் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தெருநாய்கள், கால்நடைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அனைத்து துறையினருக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
