திரைப்பட துறையில் புகழ்மிக்க நட்சத்திரங்களாக செல்வச்செழிப்புடன் வாழ்வது சந்தோஷமானது. இது சினிமாவை நம்பி வருகின்ற எல்லோருக்கும் எளிதாக கிடைத்துவிடாது.
பின்புலம் இல்லாதவர்கள் சினிமாவில் தங்களது தொடர்ச்சியான போராட்டம், திறமை காரணமாகவே உச்சத்திற்கு வர முடிகிறது. வந்த பின் தாங்கள் நடிக்கும் படங்கள், சமூக நோக்குடன் பொதுவெளியில் கருத்து சொல்வதன் மூலம் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
பிரபலமான அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்களுக்கு எதிராக அறிக்கை விடுவது, காவல் நிலையங்களில் புகார் கொடுப்பது, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அதன்மூலம் தங்களை பிரபலப்படுத்திக்கொள்வது ஒரு வகை. நமக்கு எதற்கு இந்த வம்பு என தயங்குபவர்களிடம் புகாரை வாபஸ் வாங்குவதற்கு பேரம்பேசி பணம் வாங்குபவர்களும் இங்கு இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கடந்துதான் சினிமா நட்சத்திரங்கள் செயல்பட வேண்டிய நிலை இருக்கிறது.
வழக்கு,வாய்தா, விசாரணைக்காக நட்சத்திரங்கள் செல்கிற நிலை வருகிறபோது அந்த நாள் ஏதோ ஒரு படத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியாக இருக்கும். அதனால் படப்பிடிப்பு தடைபடும். இதுபோன்ற சூழலை தமிழ் சினிமாவில் சந்திக்காத திரைபிரபலங்கள் மிகமிக குறைவாகவே இருப்பார்கள்.
அப்படியான ஒரு சூழல் நடிகர் விஜய்சேதுபதிக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, அவரது சினிமா சாதனைகளை தான் பாராட்டியதாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த அவர் தன்னை இழிவுபடுத்தியதோடு, தனது சாதியை தவறாக குறிப்பிட்டதாகவும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும், அதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ள மகாகாந்தி, தான் அவர்களை தாக்கியது போன்று அவதூறு செய்தி பரப்பி விட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற ஜனவரி 4ஆம் தேதி விஜய் சேதுபதி, ஜான்சன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
**-இராமானுஜம்**
