பாலாற்றில் தடுப்பணைகள் கட்டக் கோரியவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க் என்ற இடத்தில் உருவாகும் பாலாறு நதி கர்நாடகம், ஆந்திரப்பிரதேசத்தை கடந்து தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் நுழைகிறது. அங்கிருந்து, 222 கிலோமீட்டர் பாய்ந்து கூவத்தூர் அருகே வங்கக்கடலில் இணைகிறது.
இந்த நிலையில் லோக் தந்த்ரிக் ஜனதாதளக் கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் வழக்கறிஞருமான ராஜகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
இந்தப் பாலாற்றின் தண்ணீரை நம்பித்தான் 5 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் உள்ளது. இவர்களுக்கான தண்ணீரை சேமிக்க பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று அவரின் மனுவில் கோரப்பட்டிருந்தது. மேலும் பாலாற்றில் தடுப்பணைகள் இல்லாததால் மழைக்காலங்களில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வீணடிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவில், “பாலாறு கடந்து வரும் கர்நாடகம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் தண்ணீரை சேகரிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆகையால் விவசாயிகளின் நலன் கருதி வேலூர், கடலூர் மாவட்டங்களில் ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் லோக் தந்த்ரிக் ஜனதாதளக் கட்சி தலைவர் ராஜகோபாலுக்கு அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இது விளம்பரத்துக்காக தொடர்ந்த வழக்கு என்று நேற்று (ஜூன் 16) தள்ளுபடி செய்யப்பட்டது.
தடுப்பணைகள் கட்டப்படுவது குறித்தும், அவை எங்கெங்கு கட்டப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.