ADVERTISEMENT

செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்!

Published On:

| By Kavi

அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இந்த மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம் சுந்தர் ,சக்திவேல் ஆகியோர் முன்பு முறையிட்டார்.

அப்பொழுது அவர், “நள்ளிரவில் கைது செய்தது தவறானது. கைது விவரங்களை அவரது மனைவியிடம் தெரிவிக்கவில்லை. இதெல்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

ADVERTISEMENT

டி.கே.பாசு தீர்ப்பின்படி நள்ளிரவில் கைது செய்யக்கூடாது. கைது விவரங்களை மனைவி மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் அமலாக்கத் துறை மீறி உள்ளது” என்று தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் இன்று மதியம் விசாரிக்கிறோம் என்று கூறினர். பின்னர் மனுவாக தாக்கல் செய்து, மதியம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாட தொடங்கினார்.

ADVERTISEMENT

அப்போது நீதிபதி சுந்தர், இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி சக்திவேல் விரும்பவில்லை. எனவே இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கவில்லை. கோப்புகளை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறினார்.

இதுகுறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பெஞ்சில் ஆஜராகி தெரிவித்தார். தொடர்ந்து இவ்வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அமலாக்க பிரிவு அதிகாரிகள் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி செந்தில் பாலாஜியை காவலில் வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

செந்தில் பாலாஜி ஓமந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அங்கு சென்று காவல் நீடிப்பு செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் வழக்கறிஞர் என் ரமேஷ் கேட்டுக்கொண்டார்.

இதை நீதிபதி அல்லி ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் மருத்துவமனைக்கு சென்றார். செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறையில் நீதிபதி அல்லி விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, வருகிற ஜூன் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி அல்லி.

பிரியா

செந்தில் பாலாஜியை ‘கைது’  காட்டும் அமலாக்கத்துறை! மருத்துவமனைக்கு வந்த நீதிபதி

“ஜெயலலிதா பற்றி பேச எனக்கு அருகதை இல்லை” – அண்ணாமலை

கொஞ்சம் காதல்… நிறைய நகைச்சுவை: ’தீயா வேலை செய்யணும் குமாரு’

செந்தில் பாலாஜி வழக்கு: புதிய அமர்வுக்கு மாற்றம்!

Court custody of Senthil Balaji till June 28
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share