உடல் உறுப்புகள் திருட்டு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாமக்கள் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வறுமையில் இருக்கும் விசைத்தறி தொழிலாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி கிட்னி திருட்டு நடந்தது தமிழகத்தை அதிர வைத்தது.
கிட்னியை தானமாக வழங்கும் போர்வையில் இடைத்தரகர்களுடன் சில மருத்துவமனைகள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 19) நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் ,வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில், “ சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி, மோசடியாக ஆவணங்களை தயாரித்து கிட்னி திருட்டில் தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுகின்றன” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசு சார்பில், “கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், “மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வருகிறார்கள். அதை மருத்துவமனைகள் காப்பாற்ற வேண்டும். கிட்னியை கொடுப்பதால் என்ன பிரச்சினை வரும் என்று இப்போது அந்த மக்களுக்கு தெரியாது. பின்னாளில் தான் அதன் பாதிப்பு தெரியும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்வது கொடூரமானது, மனித உடலுறுப்புகளை பிற பொருட்களைப் போல விற்பனை செய்வது ஏற்கத்தக்கதல்ல.
கிட்னி விற்பனை விவகாரத்தில் அரசு இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிட்னி விற்பனை செய்யப்பட்டது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை செயலாளர் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
