court asks enforcement department
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறைக்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 7 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இருமுறை மனு தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.
அதன்படி மூன்றாவது முறையாகச் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த ஜனவரி 3ஆம் தேதி நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, பதில் மனுத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்று வழக்கை ஜனவரி 8ஆம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாகவும், அதனால் சிறிது நேரம் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி அல்லி, “ ஏற்கனவே பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. பதில் மனுத் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்கு வழக்குத் தொடர்கிறீர்கள்?” என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து வழக்கு சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோல்டன் குளோப் விருதுகளை வென்ற நோலனின் ஒப்பன்ஹெய்மர்
ஸ்டிரைக்: நெருங்கும் பொங்கல் – நெருக்கடி கொடுக்கும் தொழிற்சங்கத்தினர்!
court asks enforcement department