கள்ளச்சாராய மரணம்: நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By indhu

Counterfeit liquor death: HC orders TN government to report!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 21) உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 25 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி மருத்துவமனையில் 3 பேர் என 48 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், 60 க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ADVERTISEMENT

இதனிடையே, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சட்டத்துறை செயலாளரும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான இன்பதுரை நேற்று (ஜூன் 20) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேர்மையான முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த மனு இன்று (ஜூன் 21) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில், “காவல்துறை அதிகாரிகள் மீது இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “கள்ளச்சாராய விற்பனையத் தடுக்க கடந்த ஓராண்டு காலமாக காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்தன? கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கள்ளச் சாராயம் தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?

மேலும், கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: மதுவிலக்கு எப்போது? தமிழக அரசுக்கு சூர்யா கண்டனம்!

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share