கள்ளச்சாராய மரணம்… முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் : ராமதாஸ் அறிக்கை!

Published On:

| By indhu

Counterfeit death: Chief Minister should take responsibility! - Ramadoss report

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 34 உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. மேலும், 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது.

ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.

சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது.

அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.

கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார்.

தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை.

கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல… டாஸ்மாக் மதுவை குடித்து விட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய தமிழக அரசு, அதற்கான தண்டமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்காணம் நிகழ்வில் வழங்கப்பட்டது போன்று தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

உயிருக்கு போராடிக் கொண்டிருப்போருக்கு தரமான மருத்துவம் அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் : சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்!

’நெட்’ முறைகேடு அம்பலம் : தேர்வு ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share