ADVERTISEMENT

கவுன்சிலர்களை கவனித்தல், கடத்தல்: ஊருக்கு ஊர் கூவத்தூர்!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட ஊரகத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு கணிசமாக வெற்றிபெற்றவர்கள் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுயேச்சையாகப் போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் சொந்தக் கட்சியில் சீட் கிடைக்காதவர்கள்.

ஒன்றிய சேர்மனுக்கும், மாவட்ட பஞ்சாயத்து சேர்மனுக்கும் மறைமுகமான தேர்தல் என்பதால், சேர்மன் பதவியைக் குறிவைத்திருக்கும் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்கு எண்ணிக்கை மையங்களின் வாசலிலேயே மீன் கொத்தி பறவைகளாகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேநேரம் ஆளுங்கட்சியினர் தங்கள் கவுன்சிலர்களை போட்டிப் போட்டுக்கொண்டு கடத்திச் சென்று பாதுகாப்பாக அடைத்துவைக்க ஆரம்பித்துள்ளார்கள். தமிழகம் முழுவதும், அதிமுகவுக்குள் பல கோஷ்டிகள் செயல்பட்டு வருவதாலும் தலைமை மீது பயம் இல்லாததும்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

உதாரணமாகக் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் அம்மா பேரவை செயலாளர் ஏ.கே.சுப்பிரமணியன் மனைவி குணசுந்தரியை சேர்மன் ஆக்க முடிவுசெய்திருந்தார் அமைச்சர் எம்.சி.சம்பத். அமைச்சருக்கு எதிர்கோஷ்டியான முன்னாள் எம்.எல்.ஏ.சொரத்தூர் இராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மனைவி கலையரசியை சேர்மனாக்க விரும்புகிறார். இதற்காக அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான கவுன்சிலர்களுக்கு கை நிறையப் பணமும் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த நிலையில் உஷாரான சொரத்தூர் ராஜேந்திரன், நேற்று குறிஞ்சிப்பாடி கவுன்ட்டிங் சென்டருக்கு சென்று வெற்றிபெற்ற ஆறு கவுன்சிலர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு வெளியில் வந்திருக்கிறார். அப்போது ஏ.கே.சுப்பிரமணியன் ஆட்கள், சொரத்தூர் ராஜேந்திரன் காரை மறித்துத் தாக்கியபோதும் வண்டியை நிறுத்தாமல் புறப்பட்டுவிட்டார். இரவு முழுவதும் காரிலேயே வலம் வந்து அந்த அதிமுக கவுன்சிலர்களையும் மற்ற கவுன்சிலர்களையும் தனது கஸ்டடிக்கு கொண்டுவந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் சொரத்தூரின் ஆதரவாளர்கள்.

இப்போது சொரத்தூர் ராஜேந்திரன் வசமுள்ள 9 கவுன்சிலர்களை மீட்கத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் அமைச்சர் எம்.சி.சம்பத். இதற்காக சுயேச்சை கவுன்சிலர்களுக்கெல்லாம் விட்டமின் ப வீசப்பட்டு வலையும் சேர்த்தே வீசப்படுகிறது. இதே நிலைதான் தமிழ்நாடு முழுவதும். இதனால் ஊருக்கு ஊர் ஒரு கூவத்தூர் உருவாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share