தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்: விஜயபாஸ்கர்

Published On:

| By Balaji

பொது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசியை நானே போட்டுக் கொள்ள தயாராக உள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.காலை 10:30 மணிக்குப் பிரதமர் மோடி இதனைத் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே பல கட்ட ஒத்திகைகள் நடத்தப்பட்டு, மருத்துவர்கள் , செவிலியர்களுக்கு உரியப் பயிற்சியும் அளிக்கப்பட்டு தமிழக சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக நடைபெற்று வரும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாகத் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த பிரபலமான 10 மருத்துவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள உள்ளனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஊசியை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். அது போதுமான அளவு இருப்பில் உள்ளது.

ADVERTISEMENT

கொரோனாவால், பாதிக்கப்பட்டு பின் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். அதே சமயத்தில் பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்கள் முடியாதவர்கள் ஊசியைப் போட்டுக் கொள்ளக்கூடாது.

முதற்கட்டமாக மருத்துவத் துறையைச் சார்ந்த முன் களப்பணியாளர்கள் 6 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது. படிப்படியாக அடுத்த கட்டமாக மற்ற துறையைச் சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

ADVERTISEMENT

தடுப்பூசி குறித்து மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை எனில் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தால் நானே தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share