முதல் 3 கோடி பேருக்கான தடுப்பூசி செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்!

Published On:

| By Balaji

முதல்கட்டமாக 3 கோடி சுகாதார அலுவலர்கள், முன்களப் போராளிகளுக்குத் தடுப்பூசி போடும் செலவு எதையும் மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஒத்திகை, மருந்து விநியோகம் என மத்திய அரசு தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறை மாநில அரசுகளுக்கு ஆலோசனையையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான ஆயத்த நிலையை ஆய்வு செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் நேற்று (ஜனவரி 11) காணொலிக் காட்சி மூலம் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர் “உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16இல் தொடங்குவதன் மூலம், இந்த நடவடிக்கையில் உறுதியான கட்டத்தில் இந்தியா இருக்கிறது. அவசரக் காலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பு மருந்துகளுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது பெருமைக்குரிய விஷயம். உலகின் மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளின் விலையுடன் ஒப்பிடும்போது, இந்த மருந்துகளின் விலை மிகவும் குறைவானது. வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருந்திருந்தால் இந்தியா பெரும் சிரமங்களைச் சந்தித்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “அரசு மற்றும் தனியார்த் துறைகளில் உள்ள சுகாதார அலுவலர்களுக்கு முதலில் இந்தத் தடுப்பூசி போடப்படும். அவர்களுடன் சேர்த்து தூய்மைப் பணியாளர்கள், இதர முன்கள போராளிகள், காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர், ஊர்காவல் படையினர், பேரழிவு மேலாண்மை தன்னார்வலர்கள், மக்கள் நிர்வாகத்தில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள், நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்பில் தொடர்புடைய வருவாய் அலுவலர்கள் என 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்படும். இந்த 3 கோடி பேருக்கும் தடுப்பூசி போடுவதில் எந்தச் செலவையும் மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை. இதை மத்திய அரசே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

யாருக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்பதை அடையாளம் காண்பது மற்றும் கண்காணிப்பதுதான் இந்தத் தடுப்பூசி நடைமுறையில் மிக முக்கியமான விஷயமாக இருக்கும் என்று கூறிய பிரதமர் மோடி, “இதற்காக கோ-வின் (Co-Win) என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை உதவியுடன் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர், இரண்டாவது டோஸ் மருந்து தருவதும் அதன் மூலம் உறுதி செய்யப்படும். தடுப்பூசி போடுவது தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் கோ-வின் தளத்தில் பதிவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நபருக்கு முதலாவது டோஸ் மருந்து செலுத்தப்பட்ட பிறகு, கோ-வின் தளம் தானாகவே டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை உருவாக்கும். இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வதற்கான நினைவூட்டலுக்கு இந்தச் சான்றிதழ் பயன்படும். அதன் பிறகு இறுதிச் சான்றிதழ் அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

“கடந்த 3 – 4 வாரங்களாக சுமார் 50 நாடுகளில், கோவிட்-19 தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றாலும், இதுவரை சுமார் 2.5 கோடிப் பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு யாருக்காவது உடல் அசௌகரியம் ஏற்பட்டால், நிலைமையைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share