கொரோனா: ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தில் இந்தியா!

Published On:

| By Balaji

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 20,000க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இந்தச் சூழலில் பல்வேறு மாநிலங்களும் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 25,000 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இந்தியாவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்த இந்தியா, ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 19,654 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் தற்போது 6 லட்சத்து 81 ஆயிரத்து 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வேர்ல்டோ மீட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் மொத்தம் 10,567 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

முதல் இரண்டு இடங்களில் 29.5 லட்சம் பாதிப்பு, 1.3 லட்சம் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. 15.8 லட்சம் பாதிப்பு, 64,365 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,06,619 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை ஒரு லட்சத்து 11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும் மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

டெல்லியிலும் பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 2,444 பேர் உட்பட இதுவரை மொத்தம் 99,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

**-கவிபிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share