Trailer of the Film Phule 2025
சாதிகளைப் போற்றுகிற திரைப்படங்களுக்குக் கூடப் பெரிதாக எதிர்ப்புகள் முளைப்பதில்லை. ஆனால், சாதி அமைப்பைக் கேள்விக்குட்படுத்துகிற வகையில் ஆக்கப்படுகிற படைப்புகள் எளிதாக அப்படியொரு எதிர்ப்பைச் சம்பாதித்துவிடுகின்றன. சாதி அமைப்பின் வேர் எவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கிறது என்பதற்கான சான்று என்று இதனைக் குறிப்பிடுகின்றனர் சமத்துவ விரும்பிகள். கிட்டத்தட்ட இதனை அப்படியே பிரதிபலித்திருக்கிறது ‘பூலே’ இந்திப் படத்தையொட்டி எழுந்திருக்கிற சர்ச்சைகள்.
’பூலே’ தம்பதியரின் வாழ்க்கை! Trailer of the Film Phule 2025
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூகசீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே மற்றும் அவரது மனைவி சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘ஸ்கேம் 1992’ புகழ் பிரதீக் காந்தி, பத்ரலேகா, தர்ஷீல் சாஃப்ரி, வினய் பதக், அலெக்ஸ் ஓ நீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Trailer of the Film Phule 2025
பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, புனே நகரில் ஒரு வர்த்தகராக வாழ்ந்து வந்தவர் ஜோதிராவ் பூலே. பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை அந்நாளில் தனது சுற்றத்தாரிடம் வலியுறுத்தியவர். பதிமூன்று வயதில் தனக்கு மனைவியாக வந்த பத்து வயது சாவித்திரிபாய் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்று ஊக்கப்படுத்தியவர். அதனைச் செயல்படுத்திக் காட்டியவர். Trailer of the Film Phule 2025
அப்படிப்பட்ட ஜோதிராவ் பூலே, ஒருமுறை தனது நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டபோது சில அவமானங்களை எதிர்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, ‘சமத்துவ சமுதாயத்தை’ அமைக்கும் போராட்டங்களை முன்னெடுத்தார்.
பிறகு பெண் கல்விக்காகத் தனியாகப் பள்ளிகள் தொடங்கியது, கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தது, இலவச மருத்துவச் சேவைகளுக்காக மருத்துவமனை தொடங்கியது என்று ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் பூலேவின் சாதனைகள் பல. 1890இல் ‘மகாத்மா’ என்ற பட்டம் முதன்முதலில் இவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது.
கிறித்துவ மிஷனரிகள் தொடங்கிய பள்ளிகளைப் பார்த்து ஊக்கம் பெற்று, புனே வட்டாரத்தில் பூலே தம்பதிகள் பள்ளிகளைச் செயல்படுத்தினர். அங்கு இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பயின்றிருக்கின்றனர். பின்னாட்களில் அவற்றின் செயல்பாடு நின்றுபோனது. Trailer of the Film Phule 2025
இப்படிப் பல விஷயங்களை ‘பூலே’ திரைப்படம் பேசுவதாகக் காட்டியது அதன் ட்ரெய்லர்.

ட்ரெய்லர் உள்ளடக்கம்! Trailer of the Film Phule 2025
’எனக்கொரு ஒரு கனவு இருக்கு.. சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது..’ என்று அது தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, ‘புரட்சி பண்ணனும்னா சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கோ’ என்று ஒரு பாத்திரம் பூலேவை பார்த்துச் சொல்ல, ‘வெள்ளைக்காரங்க நம்மை அடிமைப்படுத்தி நூறு வருஷம்தான் ஆகுது.. நான் எதிர்க்குறது மூவாயிரம் வருஷங்களா நம்மை அடிமைப்படுத்துகிற விஷயத்தை..’ என்று அப்பாத்திரம் பதில் சொல்வதாக நகர்கிறது.
‘நீ ஒரு மதத்துல இருக்கிற உயர் சாதியினரோட மோதுற’ என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் பூலேவை எச்சரிப்பதாகவும் வசனங்கள் வருகின்றன. ’நம்முடைய முன்னேற்றத்திற்காக ‘சத்ய சோதக் சமாஜ்’ என்பதனை உருவாக்குகிறேன்’ என்று சொல்வதாகவும் ட்ரெய்லரில் ஷாட்கள் வருகின்றன. இந்த ‘சத்ய சோதக் சமாஜ்’ என்பது அர்ச்சகர்களின் செயல்பாடுகள் வழிபாட்டில் தேவையில்லை என்றது.
‘நமது நாட்டில் எளிதாக சாதி, மதத்தின் பெயரால் பிளவுகளை ஏற்படுத்திவிடலாம். எதிர்காலத்திலும் இது நடக்கும்’ என்று முடிகிறது ‘பூலே’ ட்ரெய்லர்.
இந்த உள்ளடக்கத்தை எதிர்த்துக் குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்குரல் எழுப்ப, சமூகவலைதளங்களில் அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
’இந்தியாவில் சாதிகளே இல்லை என்றால் ஏன் அதை எதிர்த்து போராடப் போகிறார்கள்’ என்று ‘பூலே’ திரைப்படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனுராக் காஷ்யப், இதே போன்ற பிரச்சனைகளால் சந்தோஷ், தடக் 2, டீஸ் உள்ளிட்ட சில படங்கள் வெளியாகாமல் முடங்கியிருப்பதாகச் சொல்லியிருந்தார்.
அதனை எதிர்த்து அவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஒருவர் ஆபாசமாகப் பதிவிட, பதிலுக்கு ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார் அனுராக். அது நிச்சயம் ஏற்புடையதல்ல. அதனை உணர்ந்து அவரே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதேநேரத்தில் பூலே படத்திற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றிருக்கிறார்.

ஜோதிராவ் பூலேவின் பிறந்த தினமான ஏப்ரல் 11ஆம் தேதியன்று இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் மகாதேவன். ஆனால், ட்ரெய்லருக்கு வந்த எதிர்ப்புகள் அதனைத் தள்ளிப்போட வைத்திருக்கிறது. அதனால், ஏற்கனவே தணிக்கை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் எதிர்ப்பாளர்களின் கூக்குரலுக்கேற்பச் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு படக்குழு ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
‘எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அளவுக்குப் படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இல்லை’ என்பதே ஆனந்த் மகாதேவனின் கருத்தாக இருக்கிறது. உண்மையில், இப்படமும் இயக்குனர் சொன்னபடியே அமைந்திருக்கக் கூடும். தியேட்டரில் வெளியாகும்போது அது உண்மையா, இல்லையா என்பது அனைவருக்கும் தெரிய வரும்.
ஆனால், அதற்கு முன்னர் தணிக்கை வாரியத்தின் அனுமதியை முறையாகப் பெற்ற ஒரு படைப்பை, அதன் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ‘அதை நீக்கு.. இதை நீக்கு..’ என்கிற ‘ஜனநாயகக் குரல்’களை எப்படிச் சமாளிப்பது என்பதுவே இப்போதிருக்கும் மிகப்பெரிய கேள்வி. இதற்காகவே, ‘சகிப்புத்தன்மையைப் பால பருவத்தில் இருந்து கற்றுத் தருவது’ போல ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் போல..!
ட்ரெய்லர்:

