விஜய்க்கு பாதுகாப்பு… அமித் ஷாவுக்கு அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை – தவெக சொல்வது என்ன?

Published On:

| By Kavi

விஜய்யின் பாதுகாப்பு தொடர்பாக தவெக அனுப்பிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பெரம்பூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்தார். போதிய பாதுகாப்பும், போக்குவரத்து மேலாண்மையும் மேற்கொள்ளப்படாததால் பிரச்சாரத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு தவெக கடிதம் எழுதியது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், “மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு பெற்ற நபராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான மற்றும் கவலைக்குரிய குறைபாடுகள் உள்ளது. 

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட உள்ளார். 

கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

இதற்காக தேவையான அனுமதியும் ஒப்புதலும் பெறப்பட்டிருந்தது. 

அதன்படி பெரம்பூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூருக்கு புறப்பட்டார். ஆனால் விஜய்க்கு போதுமான வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்று கவனிக்கப்பட்டது. 

சென்னை காவல்துறை அதிகாரிகளால் காவல்துறை பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் வழித்தட மேலாண்மை ஆகியவை முற்றிலும் வழங்கப்படாத காரணத்தால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாகன அணிவகுப்பு வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் காரணமாக நீண்ட நேரத்திற்கு சிக்கிக் கொண்டது. 

ஒய் பிளஸ் பாதுகாப்பின் கீழ் வரும் ஒரு நபர் என்பதை கருத்தில் கொண்டு பிரச்சார நிகழ்ச்சிகளின் போது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையான கூட்ட மேளாண்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தோம். 
எனினும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

சென்னை காவல் துறையின் பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் அதன் செயலாக்கத்தில் ஏற்பட்ட இத்தகைய தீவிரமான குறைபாடுகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படுபவர் ஆகிய இரு தரப்பினரின் பாதுகாப்பையும் வெகுவாக பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோருக்கு அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அனுப்பியதாக இணையத்தில் வெளியாகியிருக்கும் கடிதத்தில், மத்திய உள்துறை செயலாளர் என அஜய் குமார் பல்லாவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர், கடந்த 2025 ஜனவரி மாதமே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் உள்ளார்.

இணையத்தில் வைரலாகும் இந்த கடிதம் தொடர்பாக தவெக உரிய விளக்கம் அளிக்கவில்லை.

அதேசமயம் தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், “அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை (Fake News) சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இது போன்ற உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை போக வேண்டாம்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share