“எனது முன்னாள் நண்பரும் திமுக வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்து போட்டியிடுகிறேன். இங்கு மக்கள் தான் யார் வெற்றிபெற வேண்டும் என முடிவு செய்வார்கள்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை இன்று (மார்ச் 24) தொடங்குவதை முன்னிட்டு காலையிலேயே தேனிக்கு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெரியகுளம் தாலுகாவில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.
தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் தேனி, திருச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார்.

மக்கள் வெற்றி பெற செய்வார்கள்!
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,“தேனி தொகுதியில் டிடிவி தினகரனாகிய நானும், திருச்சி தொகுதியில் அம்மாவட்ட அமமுக செயலாளலரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதனும் வேட்பாளர்களாக போட்டியிடுகிறோம். எங்கள் இருவரையும் மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்று நம்புகிறேன். அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்து, 3வது முறையாக மோடியை பிரதமர் ஆக்குவார்கள்.
இந்தியாவின் பாதுகாப்புக்காகவும், நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடியின் கரத்தை வலுபடுத்தும் விதமாக என்.டி.ஏ கூட்டணி அனைத்து வேட்பாளர்களையும் தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெற செய்வார்கள்” என்றார்.

மிகப்பெரும் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெறுவேன்!
மேலும் அவர், “ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஆட்சியில் தேனி தொகுதியில் தேர்தல் பணி செய்துள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றும் தேனி மக்களுக்கு தேவையான வசதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவேன் என்று உறுதியளிக்கிறேன்.
எனது முன்னாள் நண்பர் தங்க தமிழ்ச்செல்வன் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். நான் யாருக்கும் குருவும் அல்ல, சிஷ்யனும் அல்ல. மக்கள் தான் இங்கு யார் வெற்றிபெற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.
எனது பணி இங்கு 15 ஆண்டுகளுக்கு பிறகும் நினைவு கூறப்படுகிறது. எனவே மீண்டும் தேனி மக்கள் அனைவரும் எனக்கு மிகப்பெரிய வெற்றியை தருவார்கள். நான் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்த தங்க தமிழ்ச்செல்வன், கடந்த 2019ஆம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தேனி, திருச்சி அமமுக வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி தினகரன்

Comments are closed.