திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் டிசம்பர் 9ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒத்தி வைத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்த நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கம்போல் நூற்றாண்டுகால பாரம்பரிய முறைப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில் உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றினர்.
இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை ஆட்சியர், போலீஸ் கமிஷனர் கோயில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று காலை மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் சிஐஎஸ்எப் படையினர் திருப்பரங்குன்றம் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தமிழக அரசு ஏன் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
