வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வள்ளலாரின் 202-வது பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சன்மார்க்க கொடியேற்றி அகவல் பாராயணம் குறித்து நூல்கள் வெளியிடப்பட்டன.
இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று காலை அன்ன தானத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “வள்ளலார் பிறந்த அக்டோபர் 5ஆம் தேதியை காருண்ய தினமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வள்ளலாருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வள்ளலாரின் 200 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வள்ளலார் அவதரித்த தினம், வருவித்த தினம், தர்மசாலையை தோற்றுவித்த தினம் என முப்பெரும் விழாவை ஆண்டு முழுவதும் 52 வாரங்களும் கொண்டாடினார். ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் வாழ்ந்த இடத்தில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்த தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அத்திட்டத்தை செயல்படுத்தினார்.
ஆனால் ஒருசில தடைகள் காரணமாக அது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போது சுமூகமான சூழல் உருவாகியுள்ள நிலையில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்” என சேகர்பாபு தெரிவித்தார்.
முதலமைச்சர் வாழ்த்து!
முன்னதாக வள்ளலார் 202வது பிறந்த தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, “தனிப்பெருங்கருணை நாள்” எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று!
“உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!”, “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்! வாழ்க வள்ளலார்!” என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குகையில் இருந்து மீட்கப்பட்ட சாதுவுக்கு வயது 188? அதிரும் நெட்டிசன்கள்!
ஒரே ஆபரேசனில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை : சத்தீஸ்கரில் இதுவே முதன்முறை!