ராஜன் குறை
கொரோனா தொற்றின் போக்கு இப்போது தெளிவாகத் தெரிகிறது. எத்தகைய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தினசரி மெள்ள மெள்ள தொற்று பரவுகிறது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு நாலாயிரம் பேர் என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. அடுத்த மாதம் ஒரு நாளைக்கு ஐயாயிரம் பேருக்குத் தொற்று பரவலாம். டெல்லி போன்ற ஒரு சில இடங்களில் பரவலின் வேகம் கடந்த இரு தினங்களில் மட்டுப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புள்ளிவிவர வரைபடத்தில் வளர்ச்சிக்கோடு நேர்கோடாக மாறுவதாகத் தெரிகிறது. Flattening the curve என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் தினமும் தொற்று பரவிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் கோடு ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. அதாவது பரவலின் விகிதம் அதிகரிக்கிறது.
நோய் தொற்றியவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து பலவிதமான செய்திகள் இருக்கின்றன. ஒரு சிலர் நோயினால் பாதிக்கப்பட்டு துன்பமடைகிறார்கள். சிலர் மரணமடைகிறார்கள். இப்போது வரை நூற்றுக்கு இரண்டு பேர் என்ற விகிதத்துக்கும் குறைவாகத்தான் மரணமடைகிறார்கள். பலர் பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பதாக உறுதியான பின்பும் பெரிய அளவு பாதிப்பு இல்லாமல் மருத்துவமனையிலோ, வீட்டிலோ தனிமைப்படுத்திக்கொண்டு இரண்டு வாரங்களில் குணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள்.
கொரோனா தொற்று என்றால் அச்சப்பட வேண்டும் என்ற நிலை இல்லை. புள்ளிவிவரங்கள் கூறுவதுபடி அறுதிப் பெரும்பான்மையினர் நோயின் பாதிப்பு இல்லாமலோ அல்லது சிறிய அளவிலான தொந்தரவுகளுடனோ குணமாகிவிடுகிறார்கள். சுவாசக் கருவி பொருத்தும் தேவை மிகவும் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது. ஆனாலும் தினசரி நாலாயிரம் பேருக்கு நோய்த் தொற்றும்போது நூறு பேர் இறக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்கு உரியதாகத்தான் இருக்கிறது. சதவிகிதம் என்ற அளவில் மிகவும் குறைவு என்றாலும், எண்ணிக்கை என்ற அளவில் இது தினசரி நிகழ்வது புறக்கணிக்கத்தக்கதாக இல்லை; கவலையளிப்பதாக இருக்கிறது.
கொரோனா எப்படி, ஏன் தொற்றுகிறது என்பது நிச்சயம் தெளிவாக இல்லை. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றவர்களுக்கு கொரோனா தொற்று என்று அறியும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இவர்கள் மீன் வாங்கவோ, காய்கறி வாங்கவோ கடைகளுக்குச் செல்லக் கூடியவர்கள் இல்லை. சமூக விலக்கத்தைச் சுலபமாக கடைப்பிடிக்கக் கூடியவர்கள். மிகவும் பாதுகாப்பாக இருக்கக் கூடியவர்கள். இவர்களுக்குத் தொற்று என்பது யாருக்கும் நோய் தொற்றலாம் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. தமிழகத்தில் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நோய் தொற்றுகிறது. மிகவும் எச்சரிக்கையாக இருந்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கும் நோய் தொற்றியுள்ளது. இதனால் நோய்த் தொற்றுக் குறித்து புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. யாருக்கும் தொற்று ஏற்படலாம் என்றுதான் தோன்றுகிறது.
இன்னும் எத்தனை நாள் தொற்று பரவும்?
பல்வேறு விதமான ஊரடங்கு நடைமுறைகளை அரசு செயல்படுத்தி பார்த்துவருகிறது. அவை எவற்றாலும் தொற்று பரவுவதை முற்றாகத் தடுக்க முடியவில்லை. சில நேரங்களில் வேகத்தை மட்டுப்படுத்த முடிகிறது. மற்றபடி அது தொடர்ந்து பரவித்தான் வருகிறது. உலகின் பல நாடுகளிலும் இதே நிலைதான் இருக்கிறது. நோய்த் தொற்று இல்லாமல் இருந்த நாடுகளில் மெள்ள தோன்றி பரவுகிறது. சில நாடுகளில் தொற்றின் வேகம் உச்சத்தை எட்டிவிட்டு பின்னர் குறைவதாகத் தோன்றுகிறது. சிலவற்றில் மீண்டும் பரவல் அதிகரிக்கிறது.
இந்தியாவில் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேருக்கு புதிதாக நோய்த் தொற்றும் அளவுக்கு வேகம் அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் பேர் என்றால், நாற்பது லட்சம் பேருக்கு நோய்த் தொற்ற நூறு நாளாகும். நான்கு கோடி பேருக்கு தொற்ற ஆயிரம் நாட்களாகும். அதாவது இந்திய ஜனத்தொகையான 130 கோடியில் நான்கு சதவிகிதம் பேருக்கு தொற்றுவதற்கு மூன்றாண்டுகள் ஆகும். நம்மால் நோய் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியலாம். ஆனால், தடுக்க இயலவில்லை. பரவலின் வேகம் குறைவதோ, நிற்பதோ யார் கையிலும் இல்லை. எந்த ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் வைரஸைக் காணாமல் போகச் செய்ய முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொற்றுப் பரவுவது அதுவாக நிற்கவில்லை, குறையவில்லை என்றால் இப்போதிருக்கும் நிலை பல மாதங்களுக்கு, ஏன் பல வருடங்களுக்குக் கூட நீடிக்கலாம். பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த இப்போதுள்ள பலவிதமான கட்டுப்பாடுகள் தொடரலாம். இதன் விளைவுகள் என்ன? என்னென்ன கட்டுப்பாடுகள் இப்போது நிலவுகின்றன? இவை யாரை பாதிக்கின்றன? புதிய வாழ்க்கைக்கு, புதிய இயல்புநிலைக்கு பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அதன் பொருள் என்ன?
இயல்பற்ற வாழ்க்கை
இருபதாம் நூற்றாண்டின் போக்கில் நகர்மயமாதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. தமிழகத்தில் சென்னை மெள்ள மெள்ள விரிந்து பரந்து இன்று எழுபது லட்சம் பேர் வாழும் பெருநகரமாகியுள்ளது. புறநகர் பகுதிகளைச் சேர்த்தால் ஒரு கோடி பேருக்கு மேல் வசிக்கும் நகரம். இந்த நகர்மயமாதலில் நகரத்துக்குள் வந்த பெரும்பாலான மக்கள் உதிரிப் பாட்டாளி வர்க்கம் என்று அழைக்கப்படும் பல்வேறு தொழில்களைச் செய்து பிழைக்கும் மக்கள். இவர்களுக்கு ஆதாரமாக விளங்குவது பொது போக்குவரத்து. சென்னையின் மின்சார ரயில்களும், பேருந்துகளும் லட்சக்கணக்கான பேரை அவர்கள் பணியிடங்களுக்கும், பல்வேறு தொழில்களுக்கும் சுமந்து செல்பவை.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மின்சார ரயில்களும், பேருந்துகளும் சென்னையில் இயக்கப்படுவதில்லை என்பதை அறிவோம். காலை நேரத்தில் சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்தவர்கள் எத்தகைய கூட்டம் அந்த ரயில்களில் பயணம் செய்யும் என்பதை அறிவார்கள். அவர்களெல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள்? பணிகளுக்குச் செல்கிறார்களா? 70 எண் பேருந்தில் அம்பத்தூரிலிருந்து தாம்பரத்துக்குப் பணிபுரிய சென்றவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?
தமிழகமெங்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் ஓடுவதில்லை. இந்த போக்குவரத்தை பயன்படுத்தி வர்த்தகம், தொழில்கள் செய்தவர்களின் நிலை என்ன? போக்குவரத்து தொழிலாளர்களின் நிலை என்ன? ரயில் நிலையங்களில் போர்ட்டர்களாகப் பணிபுரிந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? பேருந்து நிலையங்களில் வியாபாரம் செய்தவர்கள் என்ன செய்கிறார்கள்? தனியார் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்ன செய்கிறார்கள்?
கொரோனா விவாதங்கள்
கொரோனா குறித்த விவாதங்கள் பெரும்பாலும் நோய்த் தொற்று குறித்தே அமைந்துள்ளன. புள்ளிவிவரங்கள் பேசப்படுகின்றன. அரசு நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. அரசும், ஆளும் கட்சியும் தாங்கள் திறம்பட செயல்படுவதைக் கூறுகின்றன. நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன்பின் வீட்டினுள் இருப்பவர்கள் பொழுதுபோக்கு, மனநலம், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கின்றனவா என்பது போன்ற விவாதங்கள் நடக்கின்றன.
ஒரு மாபெரும் மக்கள்தொகையின் அன்றாட இயக்கம் தடைபட்டிருப்பது குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. லட்சக்கணக்கான பேர் பயணம் செய்த சென்னை நகரில் பொது போக்குவரத்து முடங்கியிருப்பதால் பாதிக்கப்படுபவர்கள் யார் என்பது குறித்து விவாதங்கள் நிகழ்கின்றனவா?
என்னவாகிறது எளிய மக்கள் வாழ்க்கை?
சென்னையிலும், தமிழகமெங்கும் போக்குவரத்து முடக்கத்தால் எளிய மக்கள் வாழ்க்கை அடைந்துள்ள பாதிப்பு என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசரமானதாகும். அவர்கள் குரலற்றவர்கள். இரு தினங்களுக்கு முன் மருத்துவமனை சென்றபோது இரண்டு பெண்கள் தெருவில் பிச்சை கேட்டுக்கொண்டு வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் வழக்கமாகப் பிச்சை எடுப்பவர்கள் போலத் தெரியவில்லை. குடும்பம் பட்டினியில் கிடக்கிறது என்று பிச்சை கேட்டார்கள்.
அரசாங்கம் இலவசமாக அரிசி மற்றும் சில அத்தியாவசிய பொருட்களைத் தருகிறது. சிறிய அளவில் பண உதவியும் செய்துள்ளது. ஆனால், இவையெல்லாம் எத்தனை நாட்களுக்கு மக்களை வறுமையிலிருந்து காப்பாற்றும் என்று தெரியவில்லை. இந்த அசாதாரண வாழ்நிலை குறித்து மத்திய தர வர்க்கத்தின் கோணத்திலிருந்து விவாதிக்காமல், பெரும்பாலான ஏழை மக்களின் கோணத்திலிருந்து ஊடகங்கள் பேச வேண்டும். ஏதோ ஒரு சில நாட்கள் சிலரை நேர்காணல் செய்தால் போதாது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் பிரச்சினையல்ல. இன்னம் எத்தனை நாட்கள் இந்த நிலை தொடரும் என்பதே தெரியாமல் இருப்பதுதான் கடுமையான பிரச்சினை.
தொற்று பரவல் அதிகரிக்கிறது என்னும்போது போக்குவரத்து என்பது தொடங்கப்படவே மாட்டாதா? அப்படியானால் அதனால் யாரெல்லாம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? அவர்கள் வாழ்வாதாரத்துக்கான மாற்று என்ன? இதைக்குறித்து ஏற்பாடுகள் யார் சிந்திப்பது?
எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், அகில இந்திய அளவில் பல பொருளாதார வல்லுநர்கள், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வலியுறுத்திய ஆலோசனை ஒன்றைச் சென்ற வாரம் மீண்டும் அரசுக்கு வழங்கியுள்ளது. அது ஏழைக்குடும்பங்களுக்கு எல்லாம் மாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைதான். இதை மாநில அரசு செய்ய இயலாது என்றால், மத்திய அரசை வலியுறுத்தவாவது மாநில அரசு முன்வர வேண்டும். அரசியல் ரீதியாக அழுத்தம் தர வேண்டும்.
நோய்த் தொற்று அதிகரித்தால், மரணங்கள் அதிகரித்தால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்று அஞ்சும் அரசும் ஆளும்கட்சியும், எளிய மக்களின் வாழ்க்கை நசிந்துபோனால், அவர்கள் வறுமையில் ஆழ்ந்துபோனால் தங்களுக்கு பிரச்சினையில்லை என்று நினைப்பது தவறு. நாட்டில் நிலவுவது புதிய இயல்புநிலை அல்ல. இயல்பற்ற அசாதாரணமான நிலை. இதனால் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்கள் குறித்து ஊடகங்களும், சிவில் சமூகமும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். அரசை நடவடிக்கை மேற்கொள்ள நிர்பந்திக்க வேண்டும்.
கொரோனா தொற்று மட்டும் பரவவில்லை. வறுமையும் பரவுகிறது என்பதை அனைவரும் உணரவேண்டியது அவசியம். இந்த நிலை மேலும் பல மாதங்களுக்குத் தொடர்ந்தால் ஏழை மக்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? பொருளாதார இயக்கம் என்னவாகும் என்பவை புறக்கணிக்கத்தக்க கேள்விகள் அல்ல.
கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com