ராகுல் காந்தியின் கூற்றை எதிரொலித்த விஜய் : செல்வப்பெருந்தகை

Published On:

| By christopher

Congress welcomed the Vijay's speech against NEET exam

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) நடைபெற்று வரும் 2வது கட்ட கல்வி விருது விழாவில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், நீட் தேர்வுக்கு எதிராக பல அதிரடி கருத்துகளை முன்வைத்தார்.

அவர், தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நீட் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை என்றும், நீட் தேர்வு குளறுபடிகளால் அதன் மீதான நம்பிக்கை மக்களுக்கு சுத்தமாக போய்விட்டது என்றும் பேசினார்.

மேலும் நீட் விலக்கு மட்டும்தான் இதற்கு உடனடித் தீர்வு என்றும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக கடும் எதிர்ப்பு குரல்களும் போராட்டங்களும் எழுந்துள்ள இவ்வேளையில் விஜயின் இந்த பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான விஜய்யின் இந்த பேச்சினை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்று வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது!

அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் கூற்றை பிரதிபலித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.

தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலும் பாசிச பாஜக மட்டும் தனியாக உள்ளதையும் மக்கள் நன்கு அறிந்து விரைவில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”நீட் விலக்கு மட்டும்தான் உடனடித் தீர்வு” : ஒன்றிய அரசுக்கு எதிராக விஜய் பேச்சு!

படிப்படியாக உயரும் தங்கம், வெள்ளி விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share