ஆறு பேர் விடுதலை: காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல்?

Published On:

| By Selvam

கடந்த நவம்பர் 11-ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஆறு பேரின் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு கடந்த நவம்பர் 18-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தது.

அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பானது இயற்கை நீதிக்கு முரணானது. மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்க்காததால் உரிய வாதங்களை முன்வைக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து இந்த வாரத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கான பணிகளில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனுசிங்வி ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது.

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டதை சோனியா காந்தி வரவேற்றிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நளினியை, பிரியங்கா காந்தி சிறையில் சந்தித்தார்.

இருப்பினும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்: விரைவில் நாடு முழுவதும் அமல்?

இடதுசாரிகளும் இடஒதுக்கீட்டுக் கொள்கையும்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share