இட ஒதுக்கீடு சட்டம்: நிதிஷ்குமார் கோரிக்கை.. மோடி மௌனம் – காங்கிரஸ் கேள்வி!

Published On:

| By Aara

இட ஒதுக்கீடு தொடர்பாக  ஐக்கிய ஜனதா தள (ஜேடியு)  தேசிய செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி… நிதிஷ் குமாரின் தீர்மானத்துக்கு அவரது தோழமைக் கட்சியான பாஜக ஏன் மௌனம் காக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

பீகாரில் இடஒதுக்கீடு அதிகரிப்பு அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேடியுவின் தேசிய செயற்குழுவில் ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

”பாட்னா உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, பட்டியல் சாதிகள் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும்  பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தும் பீகார் அரசின் முடிவை கேள்விக்குரியதாக்கியது.

எனவே நீதித்துறை மறுஆய்வை செல்லாததாக்கும் வகையில்  பிகார் அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தை  அரசியலமைப்பின் 9 வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்” என்று நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தியது.

இதுகுறித்து ஜூன் 30 ஆம் தேதி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.,

“மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும், எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து மாநில சட்டங்களும் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று  காங்கிரஸ் கோரியது.  1994ல் தமிழ்நாடு இயற்றிய சட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு இதை செய்ய வேண்டும்.

இதே கோரிக்கையை ஜேடியூ முன்வைத்தது நல்ல விஷயம்தான். ஆனால், மாநிலத்திலும் மத்தியிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க., இந்த விஷயத்தில் முற்றிலும் மவுனம் காக்கிறது.

அதேநேரம் 50 சதவீத வரம்புக்கு அப்பால் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை ஒன்பதாவது அட்டவணையில் கொண்டு வருவதும் ஒரு தீர்வாகாது, ஏனெனில் 2007 உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அத்தகைய சட்டங்களும் நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டவை. எனவே இதற்கு அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தேவை.

தற்போதைய 50 சதவீத வரம்பு அரசியலமைப்பால் வெளிப்படையாக கட்டாயப்படுத்தப்படவில்லை, ஆனால் பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தை தாண்டும் வகையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதுதான் ஒரே வழி.

இது மக்களவைத் தேர்தலுக்கான இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய உத்தரவாதங்களில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ்.

“உயிரியல் அடிப்படையில் பிறக்காத பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை  தெளிவுபடுத்துவாரா? நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் இத்தகைய மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

நிதிஷ்குமார் இதுபோன்ற  தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு நின்றுவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

இதுக்கும் அவரு தான் காரணமா? அப்டேட் குமாரு

T20 World Cup: இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த பரிசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share