விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் பேச்சுவார்த்தையே நடத்தவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சன் நியூஸ் சேனலுக்கு செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக,
தமிழக காங்கிரஸில் 3,328 விருப்ப மனுக்கள் இதுவரை பெறப்பட்டிருக்கின்றன. இன்னும் சில விருப்ப மனுக்கள் மாவட்டங்களில் இருக்கின்றன. அதெல்லாம் இன்னும் ஓரிரு நாட்களில் வரும். ஏறக்குறைய 6,000 விருப்ப மனுக்கள் நெருங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
திமுக- காங்கிரஸ் சித்தாந்த கூட்டணி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்வதைப் போல திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இழுபறியும் இல்லை. இது இயற்கை கூட்டணி, ஐடியாலஜிக்கல் (Ideological) கூட்டணி.
’அவங்க முயற்சி’ பலிக்காது
இந்தக் கூட்டணியை எல்லாம் அவ்வளவு ஈஸியாக சிதைத்துப் பிரித்து, யாரோ ஒருவர் ஆட்சி அமைப்பதற்கு, யாரோ ஒரு கட்சி தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாக காணுகின்ற கனவை நனவாக்குவதற்கு அவர்கள் இடம் பெறுவதற்கு இவ்வளவு பெரிய முயற்சிகளைச் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது, இந்தியா கூட்டணி வலிமை பெறும்.
சுமூகப் பேச்சுவார்த்தை
திமுக- காங்கிரஸ் கூட்டணியில், ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட குழு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, சுமூகமாக முடியும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது.
தவெகவுடன் பேசவே இல்லை
விஜய்யின் தவெக-வுடன் யாரும் பேசவில்லை. எங்கள் கட்சியைச் சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட – இப்ப நான் தலைவரா நான் பேசணும், இல்ல அகில இந்திய தலைமை நியமிக்கிறவங்க பேசணும்.. யாருமே பேசல. பேசாததைச் சில பேருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகப் பேசிவிட்டேன், பேசிவிட்டேன் என்று சொல்லிட்டு இருக்காங்க. ஆனா அகில இந்திய தலைமை ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுப்பார்கள். தவெகவுடன் யாரும் பேசவில்லை, எந்தக் காலத்திலும் பேச்சும் நடத்தவில்லை.
போஸ்டர் ஒட்ட கூடாது
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடணும்னு சொல்றது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை… இந்த போஸ்டர் ஒட்டுறது இதெல்லாம் வந்து அநாகரிகத்தின் உச்சம். இவ்வாறு செல்வப் பெருந்தகை கூறினார்.
