அருமனை கிறிஸ்துமஸ் விழாவை காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்துமஸ் விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் 28ஆம் ஆண்டு விழாவிலும் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், திருநெல்வேலிஎம்.பி ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக மூத்த நிர்வாகி விருப்ப ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேக் வெட்டி சிறப்புரை ஆற்றுவார் என்று அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தசூழலில் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
இந்த திடீர் புறக்கணிப்பு குறித்து அவர்கள் ஊடகங்களிடம் கூறுகையில், ”ஏற்கெனவே திட்டமிட்ட சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருப்பதால், இன்று நடைபெறும் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
