ADVERTISEMENT

”மாணவர்களுக்காக உயிர் போனாலும் பரவாயில்லை” – காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி!

Published On:

| By vanangamudi

Congress MP on indefinite hunger strike aginst bjp govt

திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) நிதியை நிறுத்தி வைத்துள்ளதை வழங்கும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று (ஆகஸ்ட் 29) தொடங்கியுள்ளார்.

சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற பெயரிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் படிப்பு வரை அனைத்து நிலைகளிலும் சமமான தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இதன்படி பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சில குறிப்பிட்ட நிதிகளை வழங்கி வருகிறது. ஏற்கெனவே நடப்பாண்டுக்கான (2024-25) நிதியானது பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

ADVERTISEMENT

ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இன்னும் ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக எம்.பிக்கள் பலரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மந்திர பிரதானை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆனால் மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க மறுத்து வருவதால், தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியை வழங்கமால் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பியான சசிகாந்த் செந்தில் தனது அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) நிதியை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

அவரிடம் தொடர்பு கொண்டு, ’தற்போது காலவரையற்ற உண்ணாவிரம் அவசியமா ?’ எனக் கேட்டோம்.

அதற்கு அவர், “இந்த போராட்டம் தற்போது மிக மிக அவசியமானது. இதற்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட போவதில்லை. இதனால் தமிழக மாணவர்களுக்காக எனது உயிர் போனாலும் பரவாயில்லை.

மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு, மும்மொழி கொள்கையை வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும் தமிழ்நாட்டிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதனால் 2024-25 ஆண்டுக்கான தமிழக மாணவர்களுக்கு வரக்கூடிய சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) நிதியை 2,152 கோடி நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்களும், 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு 2022 – 23, 2023-24 என கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் 2024-25 ஆண்டுகான நிதியை நிறுத்தி வைத்துள்ளனர். மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை அதிகமாக வழங்கியுள்ள மத்திய அரசு, தமிழ்நாடு, கேரளா மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களுக்கு மட்டும் ஒரு பைசா கூட அனுப்பவில்லை.

ஆக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். மத்திய கல்வி அமைச்சருக்கும் கடிதம் எழுதினேன். நேரிடையாக சந்திக்கவும் அனுமதி கேட்டிருந்தேன். ஆனால் இன்றுவரை நேரில் நேரில் சந்திக்க மறுத்துவிட்டனர். தமிழ்நாட்டை பாரபட்சமாக மத்திய அரசு கண்ணோக்கி வருகிறது.

மாணவர்களுக்கான நிதிக்கேட்டு பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற வளாகத்திலும் போராடினேன். பலனில்லை. அதனால் தான் காந்தி வழியில் அகிம்சை முறையில் தீர்வு கிடைக்கும் வரை இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளேன்” என சசிகாந்த் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share