தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தரப்பினர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்தக் கோரிக்கையை பொதுவெளியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் India Today கருத்தரங்கில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது. கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சிலர் சதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்வினையாக, மாணிக்கம் தாகூர் எம்.பி. “கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தவறு” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார். மேலும், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக ஆட்சியில் பங்கு இல்லை என திட்டவட்டமாக அறிவித்த நிலையிலும், மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவது கூட்டணியில் சலசலப்பு இருப்பதை காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தது.
இன்று (பிப்ரவரி 14, 2026) மீண்டும் “ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ” 2021ல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வெற்றி .. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்.
அதிகார பகிர்வு அவசியம்.
ஆட்சி பங்கு எங்கள் உரிமை.
மக்கள் தீர்மானிப்பார்கள்.” என தெரிவித்துள்ளார்.
எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் தான் நல்லது. கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. தலைவர் முடிவுதான் அவர் ஆட்சியில் பங்கு கிடையாது என்று தெளிவாக சொல்லி விட்டார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய வீடியோவை மேற்கோள் காட்டி ஆட்சி பங்கு எங்கள் உரிமை என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
