வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக புதிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக, மக்களவை காங்கிரஸ் கொறடா ஜாவத் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். Waqf Amendment Bill

அவர்களது மனுவில்,
“வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவானது அரசியலமைப்பின் பிரிவு 14 (சமத்துவ உரிமை), 25 (மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம்), 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்), 29 (சிறுபான்மையினரின் உரிமைகள்) மற்றும் 300A (சொத்துரிமை) ஆகியவற்றை மீறுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது.
வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்ப்பது மத நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடு ஆகும். இந்தத் திருத்தங்கள் பிரிவு 300A-இன் கீழ் பாதுகாக்கப்பட்ட சொத்து உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
புதிய விதிகள் தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஒருவர் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே வக்ஃப் வாரியத்திற்கு சொத்துக்களை தானமாக வழங்க முடியும் என்ற கட்டுப்பாடு, மத சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுகிறது.
மேலும், சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும், தமிழக அரசு தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Waqf Amendment Bill