“ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 12) அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா பதிவிட்டுள்ள செய்திக்குறிப்பில், “1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை விதித்து இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார்.
எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை ‘சம்விதன் ஹத்யா திவாஸ்’ (அரசியலமைப்பு படுகொலை தினம்) என்று கொண்டாட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவுபடுத்தும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு தலைப்புச் செய்தியை பிடிக்கும் முயற்சி!
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலையை விதித்த உயிரியல் அல்லாத பிரதமரின் மற்றொரு தலைப்புச் செய்தியை பிடிக்கும் முயற்சி இது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஜூன் 4, 2024 அன்று இந்திய மக்கள் அவருக்கு ஒரு தீர்க்கமான தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கினர். இது மோடி முக்தி திவாஸ் என வரலாற்றில் அழைக்கப்படும்.
அவரது ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்களை திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.
மனுஸ்மிருதியில் இருந்து உள்நோக்கம் பெறாததால், பிரதமர் மோடியின் பரிவார் இந்திய அரசியலமைப்பை நிராகரித்தது” என்று தெரிவித்துள்ளார்.
மோடி பதவிக்காலம் தான் அரசியலமைப்பு படுகொலை!
காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், “மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரசியல் சாசனம் தினமும் கொலை செய்யப்பட்டு வருகிறது. மோடியின் பதவிக்காலம் ‘சம்வோதன் ஹத்ய யுக்’ (அரசியலமைப்பு படுகொலை) என்று அழைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்தது!
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது பதிவில், “எமர்ஜென்சிக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங், பி.வி. நரசிம்மராவ் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை ஆட்சி செய்தது. இந்த நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
திசை திருப்பும் தந்திரம்!
விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “பாஜக திணறுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்… நீட் உள்ளிட்ட உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் தந்திரம் இது. அதற்காக தான் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி அளித்துள்ளது. அவர்கள் மக்களை திசை திருப்ப விரும்புகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இத்தகைய திசை திருப்பும் தந்திரங்களை மக்கள் நிராகரிப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் நிறைவேற்றிய மசோதா… இரண்டே வாரத்தில் ஒப்புதல் அளித்த ஆளுநர்!
எமெர்ஜென்சி : ஜூன் 25 அரசியல் சாசனப் படுகொலை தினம் – மத்திய அரசு அறிவிப்பு!