திமுக அரசு மீதான காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தரவுகள்- ஆய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுதான் இந்தியாவிலேயே அதிக கடன்கள் வாங்கி இருக்கும் மாநிலம் என விமர்சனம் செய்திருந்தார். திமுக அரசை திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு திமுகவின் முன்னாள் எம்.பி. எம்.எம். அப்துல்லா, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதேபோல காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் தமது எக்ஸ் பதிவில், “ மாநிலங்களை அவை வாங்கும் கடன்களை வைத்து மட்டும் மதிப்பிடக் கூடாது; உடல் எடையின் அடிப்படையில் உடல் தகுதியை பார்க்கக் கூடாது. முழுமையான தரவுகள் இல்லாத மேலோட்டமான கணிப்புதான் இது என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் பிரமுகரான மோகன் குமாரமங்கலம், மாநில அரசின் கடன் தொகையை மட்டுமே சுட்டிக்காட்டுவது சரி அல்ல. பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களைப் போல ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது என கூறியுள்ளார்.
