“கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக” காங்கிரஸ் அறிவித்த ஐவர் குழு அறிவிப்பு சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணியில் 2016-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது காங்கிரஸ். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. அண்மையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பேரணியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதேநேரத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேர வேண்டும் என்ற குரலும் தமிழக காங்கிரஸ் கட்சியில் கேட்கிறது. காங்கிரஸ் கட்சியிலேயே சில தலைவர்கள், டெல்லி வரை சென்று விஜய் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக மேலிடத்திடம் ‘நூல் விட்டும் பார்த்தனர்’. அதேபோல ஊடகங்களிலும் விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரக் கூடும் என்ற யூகத்தை கிளப்பி விட்டிருந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், “2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே , அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்திருக்கிறார். செல்வப்பெருந்தகை, சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்” என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால் தற்போது, மல்லிகார்ஜூன கார்கே குழு அமைத்துள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைதான் அறிவித்துள்ளார். இது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது என்பது ஒரு கருத்து.
மேலும் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் நீடிப்பதால், மேலோட்டமாக திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கான குழுவாக இந்த அறிவிப்பு புரிந்து கொள்ளப்படும்.
ஆனால், இப்படி ஒரு குழுவை அறிவித்த காங்கிரஸ் மேலிடம் அல்லது இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்தியா கூட்டணி” என்றோ “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி” என்றோ ஏன் குறிப்பிடவில்லை? என்ற கேள்வி எழாமல் இல்லை. இப்படி ‘மொட்டையாக’ குறிப்பிடுவதன் மூலம் திமுக தலைமை அதிருப்தி அடையும் என்பது பழம் பெரும் காங்கிரஸ் பேராயக் கட்சிக்கு தெரியாமலா இருக்கும்?
இதைவிட மிக முக்கியமானது, இப்படி ஒரு குழுவை அமைத்துள்ள காங்கிரஸ் யாருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது? திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் எனில் திமுகவில் அதற்கான குழுவே அமைக்கப்படவே இல்லையே? அப்படி எனில் எந்த குழுவுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்?
அல்லது இனி புதிய கூட்டணி அமைப்பதற்காக, “கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாடுதல்” என்ற வாசகத்தை மறைமுகமாக காங்கிரஸ் மேலிடம் இடம் பெறச் செய்ததா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
அரசியல் ஆடுகளத்தில் இப்படித்தான் ‘ஆடுபுலி’ ஆட்டம் ஆடிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் இத்தகைய ஒரு பொத்தாம் பொதுவான அறிவிப்பை வெளியிட்டதா? இந்த அறிவிப்புக்குப் பின்னணியில் இருக்கும் ‘விளையாட்டு’ என்ன? என்கிற கேள்வியையும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.
