காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்: அழகிரியின் டெல்லி அஜெண்டா

Published On:

| By Balaji

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு நேற்று (நவம்பர் 29) காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்திருக்கிறார்.

கடந்த 26 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த மாவட்டத் தலைவர்களின் கூட்டத்துக்குப் பின்பே அழகிரி டெல்லி சென்றிருக்கிறார். இந்த டெல்லி பயணத்தின் நோக்கமே தமிழகத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை மாற்றுவதுதான் என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்.

ADVERTISEMENT

கடந்த 26 ஆம் தேதி மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி, அரசியல் பண்ணுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பேசிவிட்டு, ‘விரைவில் மாவட்டத் தலைவர்களை எல்லாம் மாற்றப் போகிறோம்’ என்றும் தெரிவித்தார். இதுபற்றி நமது மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி இதழில் 28 ஆம் தேதி காலை டிஜிட்டல் திண்ணை பகுதியில், [அதிமுகவுக்குத் தாவும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்!](https://minnambalam.com/k/2019/11/28/17 ) என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தோம்.

“ ஒவ்வொரு மாவட்டமாக விருப்ப மனுத் தொகை திரட்டப்பட்டு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதன் பின் பேசினார் கே.எஸ். அழகிரி. அப்போது தன் பேச்சில் அழகிரி குறிப்பிட்ட விஷயம்தான் பல மாவட்டத் தலைவர்களை அதிர வைத்துள்ளது. ‘விரைவில் தமிழக காங்கிரசின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படுவார்கள்’ என்று அந்த கூட்டத்தில் அறிவித்தார் அழகிரி. இ து இப்போதைய பல தலைவர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே காங்கிரஸ் கட்சியில் புதிதாக ஒரு மாநிலத் தலைவர் வந்ததும் தனக்கு ஒத்துழைக்கும்படியான மாவட்டத் தலைவர்களை நியமித்துக் கொள்ளுவார்கள். ஆனால் சிறப்பாக உழைக்கும் சில மாவட்டத் தலைவர்களை பெரும்பாலும் மாற்றுவதில்லை. ஆனால் அழகிரி விரைவில் மாவட்டத் தலைவர்களை தன் தோதுக்கு நியமிக்கும் பணிகளில் இறங்கிவிட்டார்.இது தொடர்பாக இந்தக் கூட்டத்திலேயே சில மாவட்டத் தலைவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதங்கள் நடந்தன. இதன் எதிரொலியாக அழகிரியின் மீது அதிருப்தியில் இருக்கும் மாவட்டத் தலைவர்கள் சிலர் அதிமுகவில் சேரத் தயாராகிவிட்டனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்,.

ADVERTISEMENT

ஆனாலும் சளைக்காத அழகிரி மாவட்டத் தலைவர்களை மாற்றியே ஆக வேண்டும் என்று டெல்லி சென்று சோனியாவை சந்தித்தபோது கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

“ஈவிகேஸ் இளங்கோவன் மாநிலத் தலைவராக இருந்தபோது நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களை , தான் பொறுப்புக்கு வந்ததும் திருநாவுக்கரசர் மாற்றிவிட்டு தன் ஆதரவாளர்களை நியமித்தார். இப்போது தமிழக காங்கிரஸில் இருப்பவர்கள் எல்லாம் திருநாவுக்கரசர் நியமித்த மாவட்டத் தலைவர்கள்தான். எனவே அவர்களை மாற்றிவிட்டு தனக்கும், ப.சிதம்பரத்துக்கும் வேண்டப்பட்டவர்களை மாவட்டத் தலைவர்களாக நியமிக்க தீவிரமாகியிருக்கிறார் அழகிரி. இதையே சோனியாவிடமும் சொல்லியிருக்கிறார். ஆனால் மாவட்டத் தலைவர்களில் தங்களது ஆதரவாளர்களும் இருக்க வேண்டும் என்று பிற கோஷ்டித் தலைவர்கள் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே அழகிரியின் டெல்லி விசிட்டில் வழக்கம்போல காங்கிரஸ் மாநிலத் தலைவருக்கு நேர்வதுதான் நடந்திருக்கிறது” என்கிறார்கள்.

அழகிரி டெல்லிவிசிட்டின் ஒரே அஜெண்டா மாவட்டத் தலைவர்கள் மாற்றம்தான், ஆனால் அது உடனடியாக சாத்தியாகும் வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள் டெல்லி நிலவரம் அறிந்த தமிழக காங்கிரஸ் புள்ளிகள்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share