காங்கிரஸ் சிட்டிங் எம்.பி-களுக்கு மீண்டும் வாய்ப்பு? : கட்சிக்குள் சலசலப்பு!

Published On:

| By Selvam

Congress change trichy thiruvallur mps

திருவள்ளூர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் டெல்லி தலைமை ஆலோசனை செய்து வரும் நிலையில், திமுகவினரும் அந்த தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது என குரல் கொடுத்து வருகின்றனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேனி ஈவிகேஎஸ் இளங்கோவன், கன்னியாகுமரி வசந்தகுமார், சிவகங்கை கார்த்தி சிதம்பரம், கரூர் ஜோதிமணி, திருச்சி திருநாவுக்கரசர், விருதுநகர் மாணிக்கம் தாகூர், ஆரணி விஷ்ணு பிரசாத், கிருஷ்ணகிரி செல்லக்குமார், திருவள்ளூர் ஜெயக்குமார் ஆகிய 9 பேர் போட்டியிட்டதில், தேனி தொகுதியில் மட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வி அடைந்தார்.

ADVERTISEMENT

திருச்சியில் கிறிஸ்டோபர் திலக்

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 2024 தேர்தலில் ஓரிரு தொகுதிகளைக் குறைத்துக் கொடுக்க திமுக தலைமை ஆலோசனைகள் செய்து வருகிறது என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள். அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் திருச்சி, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருநாவுக்கரசருக்கு பதிலாக அதே தொகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் என்பவரை வேட்பாளராக நியமிக்க ராகுல்காந்தி ஆலோசனை செய்து வருகிறார்.

ADVERTISEMENT

காரணம், திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பதாலும், திருநாவுக்கரசருக்கு வயது முதிர்வு காரணமாகவும் கட்சியை பலப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தலைமை இந்த முடிவெடுத்துள்ளது, மேலும், கிறிஸ்டோபர் திலக் என்பவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும், ஒரிசா மாநிலத்தின் மேலிட பொறுப்பாளராகவும் ராகுல் காந்திக்கு நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பதால் திருச்சி வேட்பாளரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் தொகுதியிலும் மாற்றம்?

அதேபோல திருவள்ளூர் தொகுதி எம்பி-யாக இருக்கும் ஜெயக்குமாருக்கு உட்கட்சிக்குள்ளும் எதிர்ப்பு, தொகுதியிலும் நல்ல வரவேற்பு இல்லை. இதனால் முன்னாள் எம்பி விஸ்வநாதன் அல்லது ரஞ்சன் குமார் இருவரில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க ஆலோசனைகள் செய்து வருகிறது டெல்லி தலைமை.

கட்சியின் தலைமையின் முடிவால், திருச்சி எம்பி.திருநாவுக்கரசர், திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமார் ஆகிய சிலரை சமாளிக்க முடியாமல் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப் பெருந்தகை புதிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்” என்கிறார்கள்.

திமுகவினர் கோரிக்கை! Congress change trichy thiruvallur mps

இதுஒருபுறமிருக்க, திருவள்ளூர் மாவட்டத்தை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்று திமுக மாவட்ட செயலாளர்கள், தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், மத்திய மாவட்டம் ஆவடி நாசர், கிழக்கு மாவட்டம் டிஜெஎஸ் கோவிந்தராஜ், மற்றும் மாதவரம் தொகுதி எம்எல்ஏ-வும் சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான சுதர்சனம் ஆகியோர் இந்த முறை திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

தேர்தலை சந்திக்க பொருளாதாரத்தில் பலமாக உள்ள மத்திய மாவட்ட பொருளாளரும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரான நரேஷ்குமாரை முன்னிறுத்தி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சம்பந்தியும், 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் காயத்திரி ஸ்ரீதரனும் சீட் வாங்க முட்டிமோதி வருகிறார் ” என்கிறார்கள்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக உடன் தமாகா கூட்டணி: அதிமுக ரியாக்‌ஷன்!

ரீ-ரிலீஸ் ஆகும் அஜித்-விஜயின் ‘சூப்பர்ஹிட்’ படங்கள்

Congress change trichy thiruvallur mps

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share