2026 சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழு உறுப்பினர்கள் இன்று டிசம்பர் 3-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். இதனையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. 2026 தேர்தலுக்காக, ‘கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்கு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படவில்லை; வெறுமனே கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்காக’ என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுகவிடம் 45 தொகுதிகளைக் கேட்டு பெறுவது என முடிவு செய்யப்பட்டதை நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.
ஸ்டாலினுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸின் ஐவர் குழு இன்று சந்தித்தது.
திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்திருந்தனர். இந்த குழுவின் தலைவராக தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். இன்று எங்களது ஐவர் குழு முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தது. திமுக, தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்ததும் பேச்சுவார்த்தை தொடங்கும்.
திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ்
உங்கள் எல்லோருக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்தன; கிழக்கா? மேற்கா? தெற்கா? வடக்கா? என.. எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்து இந்தியா கூட்டணி வலிமையாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு மிகப் பெரிய முன்னுதாரணம் இன்றைய சந்திப்பு என்றார்.
கூட்டணி குறித்து சந்தேகமே இல்லை
மேலும், எங்கள் ஐவர் குழுவை சந்தித்ததில் முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருந்தார்; கடந்த 4,5 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற கூட்டணி இது.. இந்த கூட்டணி குறித்து எந்த சந்தேகமும் யாருக்கும் வரக்கூடாது” என்றார்.
எத்தனை சீட்? ஆட்சியில் பங்கா?
அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் 61; 41; 25 என குறைந்து கொண்டே வருகிறதே? ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்குமா? என செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியதற்கு, ‘கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க.. பொறுத்திருந்து பாருங்க’ என்றார் செல்வப்பெருந்தகை.
முன்னதாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கக் கூடும் என சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும் என்பதை உறுதி செய்திருக்கிறது இன்றைய சந்திப்பு.
