ராமர் குறித்த பேச்சு: ஆ.ராசாவுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம்!

Published On:

| By Selvam

Congress condemn a raja remark on Raman

ராமர் குறித்து திமுக  துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் கருத்துக்கு காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Congress condemn a raja remark on Raman

தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71-வது பிறந்தநாளை ஒட்டி ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் மார்ச் 2 முதல் 4 வரை பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. மார்ச் 2-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக துணைபொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசியபோது, “இந்தியா எப்போதும் ஒரு நாடு அல்ல. ஒரே மொழி, பண்பாடு, கலாச்சாரம் இருந்தால்  தான் ஒரு நாடு. இந்தியா நாடு அல்ல துணைக்கண்டம். காரணம்… தமிழ், மலையாளம், ஒடிசா தனித்தனி தேசங்கள்.

இத்தனை தேசிய இனங்களையும் சேர்த்தால் தான் இந்தியா. இங்கே பல்வேறு பழக்க வழக்கங்கள், பண்பாடு உண்டு. தமிழ்நாட்டிற்கு வந்தால் ஒரு பண்பாடு, கேரளாவிற்கு வந்தால் ஒரு பண்பாடு. டெல்லிக்கு போனால் ஒரு பண்பாடு. எல்லாம் மனசு தான் காரணம். நம்மிடத்தில் வேற்றுமை இருக்கிறது. இந்த வேற்றுமையை அங்கீகரிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “குஜராத்தில் பில்கிஸ் பானு என்ற 23 வயது பெண்ணை 16 பேர் பாலியல் வன்கொடுமை செய்தார்கள். அவர்களுக்கு குஜராத் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இவர்கள் ஏற்கனவே 10 வருடங்கள் தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்று சொல்லி கேபினட்டை கூட்டி குஜராத் அரசாங்கம் கைதிகளை விடுவித்தார்கள்,

அவர்கள் விடுதலையான போது, பாஜக-காரர்கள் சிறைச்சாலைக்கு சென்று ‘ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய்’ என்று கோஷமிடுகிறார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் குஜராத் அரசை கண்டித்து, கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

அன்பு தான் கடவுள். மனிதனுக்கு மனிதன் இடையிலே காட்டுகின்ற இரக்க உணர்விலே தான் கடவுள் இருக்கிறார். கள்ளமில்லாத உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம். ஏழையின் சிரிப்பிலே இறைவனை காணலாம். அப்படிப்பட்ட கடவுளின் மீது எங்களுக்கும் கோபமில்லை, கலைஞர், அண்ணா, பெரியாருக்கே கோபமில்லை.

ஆனால், நீ சொல்லுற கடவுள் இந்த கடவுள் என்றால், இது தான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றால், இது தான் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றால் அந்த ஜெய்ஸ்ரீராமனையும், பாரத மாதாவையும் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று தெரிவித்தார்.

Congress condemn a raja remark on Raman

இதேநேரம் ஆ.ராசா, “ஜெய்ஸ்ரீராம் என்று சொல்வதை ஏற்க முடியாது” என்பதை மட்டும் வீடியோக்கள் மூலமும் ஆங்கில சப் டைட்டில் மூலமும் பாஜக  பரப்பியது. இதற்கு இந்தியா கூட்டணி தலைவர்களின் பதில் என்ன என்றும் கேள்வி கேட்டது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று (மார்ச் 5) செய்தியாளர்களை சந்தித்த சுப்ரியா ஸ்ரீநாத்திடம், ராமர் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சுப்ரியா ஸ்ரீநாத், “ஆ.ராசாவின் கருத்துக்களுடன் நான் 100% உடன்படவில்லை. அவரது பேச்சை நான் கண்டிக்கிறேன்.

இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர் சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன். ராமன் என்பது கண்ணியம், நெறிமுறை, காதல்,  வாழ்க்கையின் இலட்சியம்.

ஆ.ராசாவின் பேச்சை நான் முற்றிலும் கண்டிக்கிறேன். அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். நான் அதை ஆதரிக்கவில்லை. பேசும்போது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, ”தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற பேச்சுக்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆ. ராசா அவர்களே, நீங்கள் ராமர், பாபா சாகிப் அம்பேத்கர், அரசியலமைப்பு அல்லது நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை நம்பவில்லை என்றால், பின்னர் எதை தான் நம்ப போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஆ.ராசாவின் கருத்துக்கள் இந்தியா கூட்டணியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரணம்: எடப்பாடி வலியுறுத்தல்!

மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினி?

Congress condemn a raja remark on Raman

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share