நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல்கட்டமாக 195 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரேதச மாநிலம் ரேபரேலியில் இருந்து பிரியங்கா காந்தியும், அமேதியில் இருந்து ராகுல் காந்தியும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2004-2019 வரை அமேதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் தோல்வியடைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இந்தநிலையில், இன்று நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…