வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். Congress announces black flag
இந்தநிலையில், மோடி தமிழ்நாடு வருகையை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மார்ச் 31) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டத்தை முடக்க நினைக்கின்றது.

அவ்வகையில், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.
இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார். Congress announces black flag