இந்தியாவில் சினிமாவை அரசியல் வெற்றிக்காக அதிகமாக பயன்படுத்தியது தென் இந்தியாவில் திராவிட இயக்கங்கள்.
சினிமா மூலம் தங்களை வளர்த்து கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் சினிமாவில் நாதா, ஸ்வாமி என்கிற சமஸ்கிருத கலாச்சாரத்தில் இருந்து தூய தமிழுக்கும், பேச்சு தமிழுக்கும் வசன மொழிகளை மாற்றினார்கள்.
தமிழ் சினிமாவின் மொழி நடையை செழுமைபடுத்தி அடுத்த கட்டத்திற்கு கை பிடித்து அழைத்து சென்றார்கள்.
சினிமா மூலம் சொல்லப்படும் எந்த கருத்தும் விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும் என்பதை கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆர் இருவரும் புரிந்து கொண்டு பயன்படுத்தினார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், இல்லாத காலத்திலும் சினிமாவை மத உணர்வை வளர்க்கவும், மதவெறியை தூண்டவும் இவர்கள் பயன்படுத்தியதில்லை.
சினிமாவை தீண்டத்தாகாத ஒன்றாக பார்த்து ஒதுக்கி வைத்து வந்த பாஜக இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின் சினிமா என்கிற கற்பூர சக்தியை தங்களுக்கு சாதகமாக சினிமா கலைஞர்களை பயன்படுத்தி வருகிறது.
https://twitter.com/NotDvija/status/1753687639482601479
அதன் காரணமாகவே தங்கள் சித்தாந்தத்துக்கும், நடைமுறை அரசியலுக்கும் ஏற்புடையை ’காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பாஜக ஆட்சி புரியும் அனைத்து மாநிலங்களிலும் அந்தப் படத்திற்கு சிறப்பு சலுகையும், வரிவிலக்கும், வழங்கியதுடன் படம் பார்க்க விரும்பும் அரசுஊழியர்களுக்கு விடுமுறையும் வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து ’கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை ஆதரித்தது. மறைந்த இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் அவசரநிலை கால அரசியல்நிகழ்வுகளை” எமர்ஜென்சி” என்கிற பெயரில் கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இந்திராகாந்தியாக நடித்திருக்கிறார் பாஜகவின் தீவீர பிரச்சார பீரங்கியான நடிகை கங்கனா ரணாவத். எமர்ஜென்சி படம் முழுக்க இந்திரா காந்தியை மக்கள் நலனுக்கு எதிரானவராகவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் பாலிவுட் நடிகை யாமி கவுதம், பிரியாமணி நடித்துள்ள ‘ஆர்டிக்கிள் 370’ படம் வரும் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், மும்பையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பட தயாரிப்பாளர் ஆதித்யா தர், “சரியான நோக்கத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் இயக்குநராக, தயாரிப்பாளராக இருக்கும் வரை எப்போதும் இதன் நோக்கம் சரியானதாகத்தான் இருக்கும். அப்படி எதாவது ஒரு நாள் இந்தப் படத்தின் நோக்கம் தவறாகும்போது நான் திரைத் துறையிலிருந்து விலகிவிடுவேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. குறிப்பாக குறிப்பிட்ட நோக்கத்துக்காக விமர்சிப்பவர்களை நாம் கண்டுகொள்வதில்லை.
விமர்சகர்கள் சொல்வது போல இதை ஒரு பிரச்சார படமாக நான் கருதவில்லை. அவர்களின் எண்ணம்தான் இந்தப் படத்தை பிரச்சாரப் படமாக பார்க்க வைக்கிறது.
‘ஆர்டிக்கள் 370’ என்பது இந்தியாவை மையப்படுத்திய திரைப்படம். இது ஓர் ஆச்சரியமான கதை. நான் இதுவரை கேட்டதிலேயே சிறப்பான கதை என்றும் இதைச் சொல்வேன்” என்றார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படம் வெளியாவது குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “பாஜக தேர்தலில் மீண்டும் வெற்றி பெற இதுபோன்ற சிறிய படங்களின் உதவி தேவையில்லை. கடந்த 100 ஆண்டுகளாக யாராலும் முடியாத ராமர் கோயிலை கட்டி முடித்துள்ளனர். எனவே அவர்கள் எங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்” என ஆதித்யா தர் கூறியுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நள்ளிரவில் கிளாம்பாக்கம் வரும் பயணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் : சிவசங்கர்