தமிழக அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஹை-டெக் லேப்களில் (Hi-Tech Labs) போதிய பயிற்றுநர்கள் இல்லை என்பதையும், இருக்கும் கணினிகள் பெரும்பாலும் ‘EMIS’ பணிகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கடந்த சில நாட்களுக்கு மின்னம்பலத்தில் விரிவாக எழுதியிருந்தோம். (அரசுப் பள்ளிகளில் ‘ஹை-டெக்’ லேப்)
அதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் புதைந்துள்ள நிதி முரண்பாடுகள் மற்றும் பணி நியமன முறைகேடுகள் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்கிறார், தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குமரேசன்.
மத்திய அரசின் நிதியும்… மாநில அரசின் கணக்கும்!
“மத்திய அரசின் ஐ.சி.டி (ICT) திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளிக்கும் கணினி ஆய்வகம் அமைக்க சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், அங்கு பாடம் நடத்தும் பயிற்றுநருக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் ஊதியமும் வழங்கப்படுகிறது.
இதுபோக கரண்ட் பில், இணைய வசதி எனத் தனியாக நிதி வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு 1,076 கோடி ரூபாய்க்கு கேரளாவைச் சேர்ந்த ‘கெல்ட்ரான்’ (Keltron) நிறுவனத்திற்கு டெண்டர் விட்டுள்ளது.
மத்திய அரசு ஒரு பயிற்றுநருக்கு 15,000 ரூபாய் ஒதுக்கும்போது, இடைத்தரகராகச் செயல்படும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்குக் கொடுப்பதோ சொற்பத்தொகைதான். அதுவும் தகுதியான பி.எட் (B.Ed) முடித்தவர்களை நியமிக்காமல், வெறும் 12ஆம் வகுப்பு முடித்தவர்களையும், அடிப்படைத் தகுதி இல்லாதவர்களையும் நியமித்துவிட்டு, கணக்குக் காட்டுகிறார்கள்,” என்று குமுறுகிறார் குமரேசன்.
பாடமா? அல்லது டேட்டா என்ட்ரியா?
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, பள்ளிகளில் பாடம் நடத்த பி.எட் முடித்தவர்களையே நியமிக்க வேண்டும். தமிழகத்தில் 60,000க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் பி.எட் பட்டதாரிகள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் தற்போது உள்ள ஒப்பந்த ஊழியர்கள், மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதை விட, பள்ளியின் நிர்வாகத் தரவுகளை பதிவேற்றும் (EMIS) ‘டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களாகவே’ பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
கேரளா மாடல் vs திராவிட மாடல்?
“அண்டை மாநிலமான கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் ஒரு தனி பாடமாக உள்ளது. 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வே எழுதுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் தனி பாடமாக இல்லை. அறிவியல் புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் பெயரளவிலேயே உள்ளது.
அடிப்படையே தெரியாத மாணவர்களுக்கு, ‘TN Spark‘ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் சொல்லிக் கொடுக்கப்போவதாக அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. கீ-போர்டு, மவுஸ் பிடிக்கத் தெரியாத குழந்தைக்கு பைதான் (Python) கோடிங் எப்படி புரியும்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார் குமரேசன்.
உடனடியாக 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனி பாடமாக்கி, தகுதியான பி.எட் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில், ஹை-டெக் லேப்கள் வெறும் கண்காட்சிப் பொருட்களாகவே எஞ்சும்!
