கள்ளக்குறிச்சி வடக்கு திமுக மா.செ. உதயசூரியனுக்கு எதிராக மலையளவு புகார்கள்- அதிர்ந்த ஸ்டாலின்!

Published On:

| By vanangamudi

Kallakurichi DMK

திமுக நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தொகுதி வாரியாக கலந்தாலோசிக்கும் “உடன்பிறப்பே வா” நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி, அணைக்கட்டு மற்றும் சங்கராபுரம் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜூன் 21-ந் தேதி சந்தித்து பேசினார். DMK Kallakurichi North Udhayasuriyan
முதல்வர் ஸ்டாலின் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சங்கராபுரம் உதயசூரியனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட புகார்கள், முதல்வர் ஸ்டாலினையே மிரளச் செய்து வைத்துவிட்டதாம்.

இது பற்றி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது, முதல்வர் ஸ்டாலினுடனான இந்த சந்திப்புக்கு முன்னரே கடந்த ஜூன் 8-ந் தேதி தியாகதுருக்கத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்; இதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்துப் பேசி வருகிறார். இந்த கூட்டத்தில் அனைவரும் மனம் விட்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என்றார்.

ADVERTISEMENT

இதனையடுத்து சங்கராபுரம் எம்எஸ் குமார், சின்ன சேலம் எம்சி செந்தில், செந்தில்குமார், மாத்தூர் கல்யாணராமன், சதீர் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கொட்டித் தீர்த்துவிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவில் வடக்கு மா.செ. உதயசூரியனின் குடும்பம் மட்டுமே பெரும்பாலான பதவிகள் இருப்பதை பட்டியல் போட்டு வாசித்துள்ளனர். “மாவட்ட செயலாளராக, எம்.எல்.ஏ.வாக சங்கராபுரம் உதயசூரியன் பதவியில் உள்ளார்; இவரது மனைவி அங்கயற்கண்ணி, கட்சியின் மாநில மகளிர் அணி துணை செயலாளராக இருக்கிறார்; உதயசூரியனின் மாமனார் 80 வயது ஆறுமுகம், சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்; உதயசூரியன் மகன் பர்னாலா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர்; உதயசூரியனின் அண்ணன் பன்னீர்செல்வம், வடகாந்தல் பேரூராட்சித் தலைவர்; உதயசூரியனின் நெருங்கிய உறவினர் ஆனந்தன் செழியன் மாவட்ட விளையாட்டுப் பிரிவு தலைவர்; உதயசூரியனின் பெரியப்பா பேத்தி சிந்துவள்ளி மாவட்ட மகளிர் அணி செயலாளர்; உதயசூரியனின் நெருங்கிய உறவினர் அன்பு மணிமாறன், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர்” என மா.செ. உதயசூரியனின் ஒட்டுமொத்த குடும்பமும் ஜாதியினரும்தான் சங்கராபுரம் திமுக என்ற நிலைமை உருவாகி இருப்பதாக குமுறினர்.

ADVERTISEMENT

“உதயசூரியன் பிள்ளைமார் ஜாதியைச் சேர்ந்தவர்; சங்கராபுரம் தொகுதியில் வன்னியர்கள்/ தலித்துகள்/ உடையார்கள் அதிகம் இருந்தாலும் உதயசூரியன், தமது குடும்பம்- தமது ஜாதியினருக்கு மட்டுமே பதவிகள் கிடைக்கச் செய்துவிட்டார்; இதனால்தான் சங்கராபுரம் தொகுதியை தலைமை கழகம் ‘ரெட் அலர்ட்’ லிஸ்ட்டில் வைத்துவிட்டது” எனவும் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் கொட்டியிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய எம்.சி. செந்தில், “என் மனைவியும் குடும்பத்தினரும் சென்ற ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டனர்; இந்த இறப்புக்குக் கூட மா.செ. உதயசூரியன் வரவில்லை; காலம் காலமாக் கட்சிக்காக உழைத்தும் எந்த பதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை; உதயசூரியனின் மாமனார் ஆறுமுகத்துக்கு 80 வயதாகிறது.. அவர் ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவரது கட்டுப்பாட்டின் கீழ் 30 ஊராட்சிகள் இருக்கின்றன. நடக்கக் கூட முடியாத ஆறுமுகத்தால் 30 ஊராட்சிகளிலும் கட்சி முடங்கியே கிடக்கிறது; அதனால் 15/15 என இந்த ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும்; அனைத்து ஜாதியினருக்கும் பதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரொம்பவே வேதனையுடனும் விரக்தியுடனும் பேசி இருக்கிறார்.

இதன் பின்னர் மாத்தூர் கல்யாணராமன் பேசுகையில், “எங்களுக்கும் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக மா.செ.வுக்காக அத்தனை வேலைகளையும் செய்துவிட்டோம்.. வெட்கத்தைவிட்டே சொல்கிறோம்.. “மாமா வேலை கூட” பார்த்துவிட்டோம்.. ஆனால் சொந்த ஜாதிக்காரனுக்குதான் பதவி கொடுக்கிறார் மா.செ. “எனபேச அந்த அரங்கமே அதிர்ந்து போனதாம்.

மேலும் எம்.எஸ். குமார் பேசுகையில், “சேர்மன் பதவிக்காக என்னிடம் பணம் வாங்கினார் மா.செ. உதயசூரியன்; ஆனால் சேர்மன் பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டார்; சரி.. என்னிடம் வாங்கிய பணத்தையாவது திருப்பி கொடுத்திருக்கலாம்.. அதையும் மா.செ. உதயசூரியன் கொடுக்கவில்லை” என போட்டுடைத்தார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் எ.வ.வேலு, “சங்கராபுரம் தெற்கு ஒன்றியத்தை 2 ஆக பிரித்துவிடலாமே.. நல்ல யோசனைதானே” என கூற, மா.செ. உதயசூரியனோ, “அண்ணே.. இப்போதைக்கு வேண்டாம்.. பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என அங்கேயே மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

தியாகதுருகத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இதர நிர்வாகிகள், “மா.செ. உதயசூரியன்- அதிமுகவினருக்கு உதவி செய்கிறார்; ஆனால் சொந்த கட்சியினர் மீது கேஸ் போட சொந்த கட்சிக்காரர்களையே தூண்டி விடுகிறார்.. இது என்ன கொடுமை? தலித் நிர்வாகிகளை வைத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கேஸ் போடுவோம் என மிரட்டல் விடுக்கவும் செய்கிறார்” என புகார்களை அடுக்கிக் கொண்டே போனார்களாம்

இதன் பின்னர் பேசிய எ.வ.வேலு, இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்துவிடலாம்; சென்னையில் தலைவர் நடத்தும் கூட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் பங்கேற்போம் என்றாராம்.

இதன் பின்னர் நேற்று ஜூன் 21-ந் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின், சங்கராபுரம் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். ஒவ்வொருவரிடமும் வயது, தொகுதியில் உள்ள ஜாதி நிலவரம், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை விரிவாக கேட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.

பின்னர், உதயசூரியன் மாமனார் 80 வயது ஆறுமுகத்திடம், “உங்களுக்கு இவ்வளவு வயதாகிவிட்டதே கட்சி பணிகளை எப்படி செய்ய முடிகிறது?” என கேட்க அதற்கு, “என்னால் கட்சிப் பணிகளை சிறப்பாக செய்ய முடியும்” என சொல்லி இருக்கிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பச்சையப்பன் மகன் அரவிந்தனிடம், “தொகுதியில் நல்லா வேலை செய்யுறீங்க.. உள்ளாட்சித் தேர்தலில் சேர்மன் சீட் கேட்டீங்க.. அது கிடைக்கவில்லைன்னு கோபமாக இருந்துட்டு தலைமை கழக நிர்வாகிகளுடனும் பேசாமல் இருந்தீங்களே” என முதல்வர் ஸ்டாலின் கேட்க.. ஒரு கனம் திகைத்துப் போனாராம். பின்னர் முதல்வர் ஸ்டாலினே, “சட்டமன்றத் தேர்தல் பணியை நல்லா செய்யுங்க.. யாரை வேட்பாளராக அறிவித்தாலும் தேர்தல் பணியை முழுமையாக செய்யுங்க” என அட்வைஸ் செய்தாராம்.

மா.செ. உதயசூரியனின் உறவினரான அன்புமணிமாறனிடம், “உங்க தொகுதியில் எந்த ஜாதி அதிகமாக இருக்கிறது?” என முதல்வர் ஸ்டாலின் கேட்க, ‘உடையார்’ என சொல்லி இருக்கிறார். “மக்களவைத் தேர்தலில் ஏன் நாம குறைவான வாக்குகளை வாங்கினோம்?” எனவும் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து கேள்விகள் வர என்ன பதில் சொல்லி சமாளிப்பது என திணறிவிட்டாராம் அன்புமணிமாறன்.

முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரை PEN டீம், உளவுத்துறை டீம் கொடுக்கும் 2 டீட்டெய்ல் ரிப்போர்ட்டுகளை வைத்துதான் இந்த ஆலோசனைகளை நடத்துகிறாராம். இதனடிப்படையில்தான் சங்கராபுரம் தொகுதி நிலவரத்தையும் முழுவதுமாக அலசி வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் கேள்வி கேட்டதால், மா.செ. உதயசூரியன் தரப்பு ரொம்பவே ஆடித்தான் போய்விட்டது என்கின்றனர் திமுகவினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share