தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணம் கொடுத்து ஏமாற்றி இருப்பதாக அன்புமணி மீது டெல்லி போலீசில் ஜிகே மணி புகார் அளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் 2026 ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவராக தொடர்வார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதை எதிர்த்து ராமதாஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு கூறி ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துவிட்டது.
இந்த நிலையில் அன்புமணி மீது டெல்லி போலீசில் ராமதாஸ் சார்பாக ஜிகே மணி இன்று புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிகே மணி, “பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் நிறுவனரான மருத்துவர் ஐயாதான் இன்று பொறுப்பில் இருக்கிறார். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 28-5-2022 ஆம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார். அவருடைய பதவி காலம் என்பது 28-5-2025 அன்று முடிந்துவிட்டது.
ஆனால் 2023ஆம் ஆண்டு அவர் பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு போலி ஆவணத்தை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருக்கிறார். அதை பெற்ற தேர்தல் ஆணையம் அன்புமணி 2023லிருந்து 2026 ஆம் ஆண்டு வரை தலைவர் என அறிவித்திருக்கிறது.
தேர்தல் ஆணயம் செய்தது மிகப்பெரிய மோசடி. எங்களுக்கு செய்திருக்கிற துரோக செயல். அதை எதிர்த்துதான் டெல்லி உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தோம். மருத்துவர் ஐயா பெயரில் வழக்கு தொடரப்பட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தேர்தல் ஆணயமும் அன்புமணியும் கூட்டாக சதி செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மருத்துவர் ஐயா புகார் கொடுத்திருக்கிறார்.
தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணயம். தேர்தல் ஆணையமே இப்படி மோசடி செய்தால் எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும்? அரசியல் கட்சிகளுக்கு எப்படி நம்பிக்கை வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
