வலுக்கும் ஹிஜாப் விவகாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது புகார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Complaint against Chief Minister Nitish Kumar.

பீகாரில் ஆயுஷ் மருத்துவருக்கு பணி நியமன ஆணை வழங்கிய போது அவர் அணிந்திருந்த ஹிஜாபை முதல்வர் நிதிஷ் குமார் இழுத்தது கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பீகார் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சம்வாத் என்ற இடத்தில் கடந்த திங்களன்று 1,283 ஆயுஷ் மருத்துவர்களுக்கான பணி நியமன கடிதங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டு பணி நியமன கடிதங்களை வழங்கினார். அப்போது புதிதாக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது. அந்தப் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்த நிலையில் திடீரென என்ன இது? என்று கேட்டு அவரது ஹிஜாபை கீழே இறக்கினார் முதல்வர் நிதிஷ்குமார்.

ADVERTISEMENT

அப்போது மேடையில் இருந்த துணை முதல்வர் சாம்ராஜ் சவுத்ரி, நிதிஷ் குமாரின் செயலை தடுக்க முயன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. நிதிஷ் குமார் முழு சங்கியாக மாறிவிட்டாரா? என்று ஆர்ஜேடி கட்சி கடும் விமர்சனங்களை முன் வைத்தது. முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் அளித்த பேட்டி ஒன்றில், அவர் ஹிஜாபை இழுக்கவில்லை.. நியமன கடிதம் சரியான நபருக்கு அளிக்கப்பட்டதா என்பதை சரி பார்க்க அவர் அதை இழுத்துள்ளார். இந்த விவகாரத்தை மக்கள் பெரிது படுத்தக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மனிதர். அவரை யாரும் வேட்டையாடக்கூடாது. வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார். நிஷாத்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்துக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

நிஷாந்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஸ்ரீநேட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வெட்கக்கேடான வார்த்தைகளை உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் இதை சொல்லும் விதமும் அந்த நயவஞ்சக சிரிப்பு என்பது இழிவான, ஆபத்தான மற்றும் பெண்கள் வெறுப்பு மனப்பான்மையை காட்டுகிறது.

கண்டனங்கள் வலுத்து வரும் சூழலில் அமைச்சர் நிஷாத், அந்தக் கருத்துக்களை நான் சிரித்துக் கொண்டே சாதாரணமாக எனது உள்ளூர் போஜ்புரி வட்டார மொழியில் கூறினேன். எந்த ஒரு சமூகம்,பெண் அல்லது மதத்திற்கு எதிராக தீய நோக்கத்தோடும் இல்லை. அவமதிக்கும் எண்ணமும் இல்லை. என்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஹிஜாப் சர்ச்சை வீடியோ வைரலான நிலையில், சமாஜ்வாதி தலைவர் சுமைரா ராணா தனது வழக்கறிஞர்களுடன் சென்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசி உள்ள உபி அமைச்சர் சஞ்சய் நிஷாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி லக்னோ கைசர்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இரண்டு தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share