உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் மீது குறி: ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

Published On:

| By Jegadeesh

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களுடன் சென்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை இன்று (ஜூலை 21) சந்தித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவியிடம், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் அளித்தார். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ADVERTISEMENT

தற்போது தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி-யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் 2018 ஆம் ஆண்டு மதுரை காவல்துறை ஆணையராக இருந்த போது காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஏற்கனவே அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு, இந்த பிரச்னை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் , “பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து இன்று ஆளுநர் ஆர். என்.ரவியை சந்தித்தோம். திமுக அரசின் மீது எங்கள் அதிருப்தியைத் தெரிவித்தோம். கள்ளக்குறிச்சியில் அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டது குறித்தும் போலி பாஸ்போர்ட் ஊழல் வழக்கு விசாரணையை வேண்டுமென்றே முடக்கியது குறித்தும் அதிருப்தியைத் தெரிவித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அண்ணாமலையுடன் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர்கள் வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share