நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசிய பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு கடந்த 21ந் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
இந்த மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பகுதியை சேர்ந்த பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞரும் ஆர்வமுடன் பங்கேற்றார். மாநாட்டில் விஜய் ரேம்பவாக் சென்ற போது அவரை பார்த்த உற்சாகத்தில் ரேம்ப் மீது சரத்குமார் ஏறினார். அப்போது விஜய்யை பின் தொடர்ந்த பவுன்சர்கள் சரத்குமாரை குண்டுக்கட்டாக தூக்கி வீசினர். இதில் நல்வாய்ப்பாக அந்த இளைஞருக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சரத்குமாரின் தாய் தொண்டருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத விஜய்யால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று ஊடகங்களிடம் பேசி இருந்தார்.
இந்த நிலையில் சரத்குமார் தூக்கி வீசப்பட்டது நான் இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று சரத்குமார் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனை நேரில் சந்தித்து பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
தவெக கட்சியினர் சமாதான பேச்சில் ஈடுபட்டதால் கட்சிக்கு அவப்பெயர் வர கூடாது என்பதால்தான் நான் மறுப்பு வீடியோ வெளியிட்டேன்.
ஆனால் மறுப்பு வீடியோ வெளியிட்ட பிறகு தவெக கட்சியினர் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து தான் தற்போது பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
