கடந்த சில வருடங்களில் நடந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தியவை ஒன்றுதான்.இன்னும் சில வருடங்களுக்கு இந்த நிலைத் தொடரவும் செய்யலாம்.
உலக வரலாற்றிலேயே 2023 ஆம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். இதனால் மனிதர்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
முக்கியமாகப் பெண்கள், பாலினப் பாகுபாடுகள், அதிகாரச் சமமின்மை, மற்றும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழ்நிலை போன்ற சிக்கல்களைச் சந்திப்பதால், அளவிற்கதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணத்தினால்தான், உலக பாலின இடைவெளி குறியீட்டு ( Global Gender Gap Index) பட்டியலில் இந்தியா, கீழிருந்து 18 ஆவது இடத்தில் உள்ளது.
மறைமுகப் பாதிப்புகள்:
ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) சமீபத்திய அறிக்கை ஒன்று, கடும் வெப்பத்தால் பெண்கள் சந்திக்கும் பாதிப்புகளை எடுத்துக்கட்டியுள்ளது. current affairs tamil women
உதாரணத்திற்கு, குடிசை மற்றும் தகர வீடுகளில் வாழும் பெண்கள் பலவிதமான சிக்கல்களைத் தினம் தினம் சந்திக்கிறார்கள். தகர வீடுகளில் சூடு அவ்வளவு எளிதாக வெளியே செல்லாது, மற்றும் சமையலறைகள் மிகச் சிறியதாக இருக்கும், சமைப்பதால் உருவாகும் வெப்பமும் பெண்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
இவற்றுடன் அவர்களின் வறுமை மற்றும் வீட்டிலிருப்பவர்களுக்குப் பணிவிடை செய்வது மேலும் சுமையை அதிகரிக்கிறது.
இதன் காரணமாகப் பெண்களின் வேலைத்திறன் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது. நம் நாட்டு ஆண்கள் சராசரியாக வீடு வேளைகளில் 25 நிமிடங்கள் ஈடுபட்டால், பெண்கள் இதை விடப் பத்து மடங்கு அதிகமாகச் செலவழிக்கிறார்கள் என்று தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் 2019 கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
இந்தப் புள்ளிவிவரம் பெண்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்று மேலும் எடுத்துக்காட்டுகிறது.
நகர்ப்புறத்துப் பெண்களின் நிலைமை:
நகரங்களில், முறைசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்கள், கடும் வானிலைகளைத் தினம் தினம் சந்திக்கிறார்கள். அது காய்கறிச்சந்தையாக, கட்டடத்தொழிலாக, மற்றொருவரின் வீட்டு வேலையாக, என எந்தத் தொழிலாகவும் இருக்கலாம்.
இப்படியிருக்கும் நிலையில், அவர்களுக்கு உடல் சூட்டை ஆற்றிக்கொள்ள, மின் விசிறி, காற்றோட்டமான இடம், காற்றைக் குளிரூட்டும் சாதனங்கள் (Air Conditioner) போன்ற எந்த வித வசதியும் கிடைப்பதில்லை.
நீர்த் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடுகள், பெண்கள் அனுபவிக்கும் அசவுகரியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
கிராமப்புறத்துப் பெண்களின் நிலைமை:
தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5, 56.8 % கிராமத்துக் குடும்பங்கள் இன்றும் விறகு, எரு போன்றவற்றைத்தான் சமையல் எரிப்பொருளாக பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இதனால் பாதிப்படைவது பெண்கள்தான்.
சுகாதாரம்:
இப்படி அதீத வெப்பத்தால், பெண்கள் பல விதமான உடல் உபாதைகளைச் சந்திக்கிறார்கள். அடிக்கடி உடல் சோர்வடைவது, தசைப்பிடிப்பு, வெப்ப வாதம் போன்றவை.
தீர்வு:
இந்த நிலைமையைச் சரி செய்யப் பல தளங்களில் வேலை செய்யவேண்டும்.
- பருவநிலைக்கு ஏற்ற மாதிரி நகரக் கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும்.
- பொது மக்கள் இளைப்பாறுவதற்கு நிறையப் பூங்காக்களை ஏற்படுத்த வேண்டும்.
- வீட்டு வேலைகளை அனைவரும் பங்கீட்டுச் செய்ய வேண்டும்.
- தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் மக்களுக்குத் தடையில்லாமல் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
- பாலினப் பாகுபாடுகள் களையப்படவேண்டும்.
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service GS 2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- சமூக நலத்திட்டங்கள் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் முறை
உணவுப் பணவீக்கம் 9.36% ஆக உயர்ந்துள்ளது