மத்திய ஆசிய நாடான கஸகஸ்தானின் தலைநகரம் அஸ்தானாவில் ஜூலை மூன்றாம் தேதி தொடங்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின்(Shanghai Cooperation Organization), அரசு தலைவர்கள் சபை சந்திப்பிற்கு இந்திய வெளியுறவு அமைச்சர், திரு ஜெய்சங்கர் சென்றுள்ளார். இந்த சந்திப்பு இரண்டு நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. current affairs tamil SCO
வழக்கமாக இந்தச் சந்திப்பில் இந்திய பிரதமர்தான் பங்கெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிரதமருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் சென்றுள்ளார். current affairs tamil SCO
திரு ஜெய்சங்கர் அவர்கள் வியாழக்கிழமை அன்று உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழன் அன்று இந்த அமைப்பு அஸ்தானா பிரகடனத்தை ஏற்று, நடைமுறைபடுத்தயிருக்கிறது. இந்த பிரகடனம், உறுப்பினர் நாடுகளுக்கிடையே, பொருளாதாரப் பிரச்சினைகள், தீவிரவாத பிரச்சினைகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் மோடி பங்கேற்காதது, பாகிஸ்தான் மற்றும் சீன அதிபர்களுடன் மேடையை பகிர்ந்துக்கொள்வதில் இருந்து அவரை காப்பாற்றிவிட்டது என்று சொல்லப்படுகிறது. ஏன் என்றால், சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்தியாவின் உறவு தற்போது சீராக இல்லை.
ஷங்காய் கூட்டுறவு அமைப்பு:
- இது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின்,அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ தளங்களில் ஒத்துழைக்கும் ஒரு கூட்டமைப்பாகும்.
- இதுவொரு அரசுகளுக்கிடையேயான சர்வதேச அமைப்பு.
- இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு துவங்கப்பட்டு, ஒப்பந்தம் இரண்டாயிரத்து இரண்டாமாண்டு கையெழுத்திடப்பட்டு,இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
- இதன் அலுவல் மொழிகள் ரஷியன் மற்றும் சைனீஸ் ஆகும்.
உருவான வரலாறு:
- இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டுக்கு முன், கஸகஸ்தான், சீனா, கிருகிஸ்தான், ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் ஷங்காய் ஐந்து என்ற அமைப்பில் இருந்தார்கள்.
- இரண்டாயிரத்து ஒன்றில் உஸ்பெகிஸ்தான் இந்த அமைப்பில் இணைந்த பிறகு, இதன் பெயர் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு என்று மாற்றப்பட்டது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டாயிரத்துப் பதினேழாம் ஆண்டு உறுப்பினர்களானார்கள்.
உறுப்பினர்கள்:
- கஸகஸ்தான், சீனா, கிருகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான்
பார்வையாளர்கள்:
- அஃப்கானிஸ்தான்,பெலாரஸ்,ஈரான், மங்கோலியா.
விவாத உறுப்பினர்கள்:
- அசர்பைஜான், அர்மீனியா, கம்போடியா, நேப்பாள், துருக்கி, இலங்கை.
குறிக்கோள்கள்:
- உறுப்பின நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையை வலிமைப்படுத்துதல்.
- அரசியல், வியாபாரம், தொழில்நுட்பம், கலாச்சாரத் தளங்களில் ஒத்துழைத்தல்.
- கல்வி, எரிசக்தி, போக்குவரத்து, சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் உறவுகளை மேம்படுத்துவது.
கட்டமைப்பு:
- அரசு தலைவர்களின் சபை – தலைமை அமைப்பு
- அரசாங்கத் தலைவர்களின் சபை – நிதிநிலை, பொருளாதாரச் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் சபை.
- வெளியுறவு தலைவர்களின் சபை – தினசரி நடவடிக்கைகளை முடிவுசெய்கிறது.
- பிராந்தியப் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (Regional Anti Terrorist Structure) – தீவிரவாத, பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத சக்திகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
- தலைமைச் செயலகம் – பெய்ஜிங், சீனா.
செயல்பாடுகள்:
- ஆரம்பத்தில் இந்த அமைப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதங்களின் மீது தான் கவனம் செலுத்தியது.
- இரண்டாயிரத்து ஆறு முதல் போதைப் பொருள் கடத்தல் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கியது.
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS-2 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
- சர்வதேசிய அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….