வடகிழக்கு மாநிலமான அசாமில், வியாழக்கிழமை(4-07-2024) அன்று ஆறு நபர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளார்கள். இவர்களுடன் சேர்த்து மொத்தம் ஐம்பத்திரண்டு பேர்கள், மே மாதம் ஆரம்பித்த மழை காரணமாக பலியாகியுள்ளார்கள். current affairs tamil assam floods
பிரம்மபுத்திரா நதி மற்றும் மற்ற நதிகளின் நீர் அளவு சற்றுக் குறைந்து காணப்பட்டாலும், வெள்ள அபாயம் தொடர்கிறது என்று அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு வெள்ளப்பாதிப்பினால், 21.13 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே போகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்குவதற்கு 247 நிவாரண முகாம்களை அசாம் அரசாங்கம் அமைத்துள்ளது.
புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் முப்பத்தொரு விலங்குகள் பலியாகியுள்ளன.
எட்டு இடங்களில் கரைகள், உடைந்ததும், மற்ற வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழைதான் வெள்ளத்திற்குக் காரணம் என்று அதிகார வட்டங்களில் பேசப்படுகிறது.
வெள்ளம் என்றால் என்ன?
- பொதுவாக உலர்ந்த நிலையில் இருக்கும் நிலங்களைத் திடீரென அளவிற்கதிகமான தண்ணீர் மூழ்கடித்துவிடுவதை, வெள்ளம் என்று நாம் சொல்கிறோம். current affairs tamil assam floods
மூன்று வகை வெள்ளங்கள்:
ஆற்று வெள்ளம்:
- ஆற்றின் தண்ணீர் அளவு அதிகரித்து, கரைகளை மீறிப் படர்ந்தால், அது ஆற்று வெள்ளம்.
திடீர் வெள்ளம்:
- தொடர் கனமழையால் ஏற்படும் வெள்ளம்.
கடலோர வெள்ளம்:
- கடலில் திடீரென உருவாகும் புயல்களால், அலைகளின் அளவு மற்றும் வேகம் அதிகரித்து, கரையோரப் பகுதிகளை மூழ்கடிப்பது.
அசாம் மாநிலம் ஏன் வருடாவருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது?
பிரம்மபுத்திரா நதி:
- கைலாச மலைகளில் உருவாகும் பிரம்மபுத்திரா நதி அருணாசல் பிரதேசத்தின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. பின்பு, கிட்டத்தட்ட 650 கிலோமீட்டர் அளவிற்கு அசாம் மாநிலத்தில் ஓடுகிறது.
- கைலாச மலை வெகு உயரத்தில் இருக்கிறது, அசாம் மாநிலமோ சமதளப் பகுதிகளைக் கொண்டது.
- இதனால், அசாமிற்குள் நுழைந்ததும், வேகம் குறைவதால், நதி கொண்டுவரும் வண்டல் மண், கற்கள் போன்றவை, ஆற்றின் படுகையில் தேங்கி விடுகின்றன.
- இதன் காரணத்தால், கனமழை அல்லது இமய மலைகளில் பனி உருகினால், பிரம்மபுத்திரா நதியில் தண்ணீர் கரையை உடைத்துக்கொண்டு ஓடக்கூடிய கட்டாயம் ஏற்படுகிறது.
பருவமழை:
- வடகிழக்கு மாநிலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளால் எப்பொழுதும் பாதிக்கப்படும். அசாம் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆற்றங்கரை அரிப்பு:
- நதிநீர் அதனுடன் கற்கள், வண்டல் மண், போன்றவை களை எடுத்துவருகின்றன. இவை கரையோரங்களைச் சிறிது சிறிதாக அரிக்கும் திறன் கொண்டவை. பல வருடங்களுக்குத் தொடர்ந்து இப்படி நடந்தால், கரைகள் தங்களது வலுவை இழந்து, உடைந்துவிடும்.
அதிகரிக்கும் மக்கள் தொகை:
- மக்கள் தங்களது தேவைக்கேற்ப நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்வதால், நதிகளின் ஓட்டம் ஆங்காங்கே தடைப்பட்டுவிடுகிறது. விளைவாக நதிகள் கரையை உடைத்துக்கொண்டு ஓடுகின்றன.
மாணவர்களுக்கான குறிப்பு :
- UPSC Civil Service GS 3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC குரூப் 1, குரூப் 2 Prelimsக்கு உதவும்.
- பேரிடர் மேலாண்மை சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தி தொகுப்பு UPSC, TNPSC, மற்றும் பிற போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உலக பாரம்பரியக் குழுவின் நாற்பத்து ஆறாவது அமர்வு
காற்று மாசுபாட்டால் டெல்லியில் ஆண்டுக்கு 12,000 பேர் உயிரிழப்பு
அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!